கிரான்குளம் எனும் பெயர்


 

கிரான்குளம் எனும் பெயர் 

========================


கிரான்குளம் என்ற பெயர் 

கிழக்கிலே உதித்த பெயர் 

மீன்பாடும் தேனகத்தின் 

மடியனைய வந்த பெயர் 

குளத்தோரப் புற்களிலே 

குவலயமாய் நின்ற பெயர் 

முன்னோரின் மூதுரையாய் 

முடியாக வென்ற பெயர் 


மட்டு நகர் பதியிருந்து

பதினேழு மயில் தொலைவாய்

மண்முனைப் பற்றுதன்னில்

தெற்கினிலே எல்லையுறு

கிராமமாகி நின்ற பெயர்

நான்கு கிராம அலுவலர் பால்

மக்களவர் நிறைந்திருந்து

மகிழ்வு காணும் மலர்ச்சிப் பெயர்


கடல் நீரின் கலப்பினிலே மீனவர்கள்

கலந்திருந்து இரவு பகல் 

ஒருமனதாய் ஓயாத அலைகளிடம்

ஒருகதையாய் சொன்ன பெயர்

நன்நீரின் நயம் படைப்பில்

நட்பினால் நாளிகை பால்

விராலோடு விண்மீனும்

கதை பேசி விழிக்கும் பெயர்


இயற்கையன்னை அரவணைப்பில் விவசாயமது தழைத்தோங்கி

வெள்ளரியின் விசேடமதை

உலகறிய செய்தபெயர்

நெசவோடு பிரம்பு பனையோலையென

கைத்தோழில்கள் பற்பலவும்

கலந்திருந்திருக்கும் கனவுப்பெயர்


விவேகானந்த பூங்காவது

வியப்புடனே அழகு செய்து

சஞ்சீவினி வைத்தியசாலை நிதம்

இதயமாற்று சிகிச்சைகாணும்

பெரிய கட்டு பெயரதுவும்

பெருமிதமாம் இதனணைப்பில்

தர்மபுரம் தானிருக்கும்

எழில் நிறைந்த சோலைகளாம்

எங்களூரே கிரான்குளமாம்


ஆலயங்கள் பற்பலவும்

அதனுள்ளே இருப்பிடமாய் 

ஆன்மீகத் தன்மையதை 

எடுத்தியம்பும் சிறப்பு பெயர் 

புதுக்குடியிருப்பூரும் 

குருக்கள் மடத்தூரும் 

மட்டு மீன் வாவியதும் 

இந்து சமுத்திரமும் 

அழகு செய்யும் அருமை பெயர்


கல்வியுடன் பண்பாடும் 

கலாசார விழுமியமும் 

மரபின்மடி தவழ்ந்தபடி 

உயர்ந்திருக்கும் உறவுப் பெயர்

விருந்தோம்பல் என்று சொன்னால் விளைவை எதிர் பார்த்திடாது 

வித்தகமாய் பற்பலவும் 

செய்து வைக்கும் செல்வப் பெயர்


நல்ல பல நிகழ்வுகளை 

நன்நிலமாய் கொண்டமைந்து 

நல்வரமாய் நின்று நிதம் 

நலமளிக்கும் நன்றிப் பெயர் 

வடக்கில் வல்வெட்டித்துறை என்றால் கிழக்கினிலே கிரான்குளமாய் 

நின்றதொரு நினைவுப் பெயர் 

இது தானாக வந்த பெயர் 

அத்தனையும் முத்தெனவே 

வித்தகமாய் கொண்ட பெயர்


பேராசிரியர் கலாநிதி மட்டுமின்றி 

கற்றறிந்த சமூகமென 

கருத்தில் கொண்ட கருணை பெயர் தன்னகத்தே அனுபவமாய் 

சுயதொழிலில் உயர்வு கண்டு 

ஊக்கமென வளர்ந்திருக்கும் ஊற்றுக்களை கொண்ட பெயர் 

அது என்றும் சொந்தப் பெயர் 

எங்கள் கிராமமத்தின் அன்புப் பெயர்


சமூகத்தின் பற்றாகி 

சகலகலை வித்தாகி 

மனிதத்தின் சொத்தாகி 

உணர்வுகளின் ஊற்றாகி 

உறவுகளின் அச்சாகி 

ஊரெனவே உயர்ந்திருக்கும் மத்தாகி சித்தெனவே வந்த வித்தாகி 

வந்ததுதான் ஊரின் பெயர் 

இது உண்மை பெயர்


நடுவூரில் நர்த்தினமாய் 

அமர்ந்திருக்கும் விநாயகரின் 

அருளினுக்கு ஈடாகி

அன்பரவர் நெஞ்சினிலே 

அருங் கொடையாய் வந்தபெயர் 

இது ஆசியுள்ள நல்ல பெயர் 

அர்த்தமுள்ள செல்லப்பெயர் 

ஈடினை இலாதபடி 

காத்து நிற்கும் காவல் பெயர்


நான்கு பாடசாலை கண்டு 

நயமுடனே கல்விதனை 

கற்க கசடற விதியுடனே 

கருத்தாக எங்கள் முன்னே 

கனியமுதாய் தந்த பெயர் 

கடினமிகு கல்வியதன் 

வழியினிலே வளர்வதற்கு

வழியமைத்த அன்புப் பெயர்


இயற்கையின் வண்ணமாகி 

இணையிலாப் பொருளுமாகி 

பொய்கையின் அழகு மின்ன 

பெருமிதம் தந்த பெயர் 

அலைகடல் மோதி வரும் 

அன்னை தமிழ் பாடிவரும் 

ஆறதன் வெளியினுள்ளே 

அருமை மீன் பாட்டிசைக்கும் 

தென்றலின் கீற்று தன்னில் 

தெவிட்டாத பாட்டிசையாய் 

விருப்புடன் எங்கள் முன்னே 

விருதாகி வந்த பெயர்

அதுவே கிரான்குளம் என்றதோரு

உறுதியுறு ஏற்றப்பெயர் 

__________________________

கவிஞர் ரவிகிருஷ்ணா 

திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் 

கிரானாகுளம்

மட்டக்களப்பு

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை