பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி
பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி
குழந்தை பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையுள்ள மிகவும் நீண்டதொரு காலப்பகுதியை தமது வளரும் காலமாக கொண்ட குழுவினரே பிள்ளைகள் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பிள்ளையின் வளர்ச்சி என்பது கூறுகூறுகளாக ஏற்படுவதில்லை அது கற்றலுடன் சம்பந்தப்பட்ட முழுமையான வளர்ச்சியாகும். வளர்ச்சியும் கற்றலும் சேர்ந்த ஒரு முழுமையான விருத்தியிலே தான் ஒரு பூரணமான பிள்ளையை உருவாக்க முடியும். இத்தகைய இம்முழுமையான வளர்ச்சியினுள் பல கூறுகள் இணைந்துள்ளன அவற்றை நாம் ஐந்து கூறுகளாக நோக்கலாம்
1. உடல் வளர்ச்சி.
2. உள வளர்ச்சி.
3. மனவெழுச்சி வளர்ச்சி.
4. சமூக வளர்ச்சி.
5. ஒழுக்க வளர்ச்சி.
எனவே பிள்ளை விருத்தி என்பது விருத்திப் போக்கின் ஒவ்வொரு பருவங்களிலும் உடல், உள, மனவெழுச்சி, சமூகம்சார், ஒழுக்க வளர்ச்சிகள் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான, நிறைவான செயற்பாடாகும்.
இவற்றுள் மனவெழுச்சி என்பது உணர்ச்சி என்பதிலும் வேறுபாடானது. இது தூண்டல்களால் தூண்டப்படுகின்ற மனநிலையாகும் என ஸ்கின்னர் (1938) போன்ற நடத்தை வாதிகள் குறிப்பிடுகின்றனர். மனவெழுச்சியிலே உணர்ச்சிகளும் உடலியற் தாக்கங்களும் அடங்கியுள்ளன. எனவே மனவெழுச்சிக்கும் பிள்ளை வளர்ச்சிக்கும் நெருங்கிய தாக்க விளைவுகள் காணப்படுவதுடன் ஆளுக்காள் வேறுபடத்தக்கதுமாகும்.
மனித நிலைப்பாட்டில் உணர்வுகளும் மனவெழுச்சிகளும் பிரிக்க முடியாத இரு அம்சங்களாகும். இந்த வகையில் பிள்ளைப் பருவத்தில் ஏற்படும் மனவெழுச்சியை விளக்குதல் கடினமான செயலென உளவியலாளர்கள் குறிப்பி;டுகின்றனர். இதற்குக் காரணம் பெரும்பாலான பிள்ளைகளின் மனவெழுச்சி வளர்ச்சி வௌ;வேறு விதமாக வளர்வதாகும்.
மனிதனது வாழ்நாள் முழுவதும் மனவெழுச்சிகளுடன் உணர்ச்சிகள் பங்கு கொள்கின்றன. யதார்த்தமான மனவெழுச்சி உலக நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு காரண காரியத் தொடர்புகளுடன் காணப்படும்.
மனவெழுச்சியானது மனப்பதிவாகி சிறிது காலம் தொடருமாயின் அதனை 'மூட்டம்' என்பர். மனவெழுச்சியை உருவாக்கிய காரணம் மறைந்த பின்னரும் மூட்டம் நீடிக்கும் போக்குள்ளது.
மகிழ்ச்சி, அன்பு, கோபம், களிப்பு, துயரம் போன்ற மனவெழுச்சிகளை அனுபவிக்காமல் ஒருவனுடைய வாழ்க்கை எவ்வாறு அமையும் என்பதை எம்மால் சிந்திக்கவே முடியாது. ஒரு குழந்தை மகிழ்ச்சி, வலி ஆகியவற்றை அனுபவிக்கவும் மனவெழுச்சிகளை வெளிப்படுத்தவும் கூடிய திறனும் தகுதியுடனுமே பிறக்கின்றது. குழந்தைப் பருவத்திற்கும் பிள்ளைப் பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் மூளையின் கீழ்பகுதியில் உண்டாகும் முதிர்ச்சிக்குரிய மாற்றங்களே மனவெழுச்சி நடத்தைகளைக் கட்டுப்படுத்துகின்றன. மனவெழுச்சியினால் உண்டாகின்ற உளமாற்றம் இரு இயல்புகளைக் கொண்டது.
1. ஒருவனிடம் ஏற்படுகின்ற உள்ளார்ந்த மாற்றம்.
2. புறத்தே தெரிகின்ற மாற்றம்.
இத்தகைய மனவெழுச்சி மாற்றங்கள் ஒருவனது நடத்தையில் சமநிலையற்ற நிலையை ஏற்படுத்துவதைக் காணலாம்.
மனவெழுச்சியின் தோற்றப்பாடு மனவெழுச்சிகளை தோற்றுவிக்கும் காரணிகளை நோக்கும் போது சிலர் ஹார்மோன்களின் செயற்பாடுகளால் ஏற்படுகின்றன எனவும் வேறுசிலர் நரம்புகளின் தொழிற்பாடுகளால் தோன்றுகின்றன எனவும் கூறுகின்றனர்.
மனவெழுச்சி ஏற்படுவதற்கு முதன்முதலில் அங்கியினால் உணரக்கூடிய தூண்டல் கிடைக்கப்பெறல் வேண்டும். ஏதாவது தூண்டல் காரணமாக ஏற்படும் உணர்வே மனவெழுச்சியின் ஆரம்பநிலையாகும்.
புலோமின் (1985) என்பவர் மனவெழுச்சியை விஞ்ஞான ரீதியாக ஆய்வு செய்து தூண்டல் காரணமாக அங்கியில் இருவிதமான மாற்றங்கள் ஏற்படுகி;றன என்கிறார்.
1. உடல் மாற்றம் - அகரீதியான துலங்கல்.
(தூண்டல், துலங்கல் செயற்பாடுகள்)
2. உளவியல் மாற்றம் - அறிவு சார்ந்த எதிர்த்தாக்கம்.
(அகம் சுரக்கும் சுரப்பியின் தொழிற்பாட்டு ஓமோன்)
இந்த இருமாற்றங்களும் சமூகம் எதிர்பார்க்கும் விழுமியங்களுடன் தொடர்புடையதாக இருக்கும் எனவும் புலோமின் விளக்கம் தருகின்றார். அதாவது பொருத்தமற்ற சந்தர்ப்பத்தில் உயிரி தனக்கு வருகின்ற கோபத்தை வெளிக்காட்டாமல் அடக்கலாம். இங்கு சமூகம்சார்பான விழுமியச் செயற்பாடு காரணமாகவே இம்மனவெழுச்சி அடக்கப்படுகின்றது. எனவே மனவெழுச்சியானது உடல் மாற்றம், உளவியல் மாற்றம், சமூகம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாகக் காணப்படுவதை உணரமுடிகின்றது.
மனவெழுச்சியின் வகைப்பாடுகள் மனவெழுச்சி மனிதனுக்கு எந்த வயதிலும் அவசியமான உயிரியல் தேவை எனலாம். பொருத்தமற்ற மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தி அவற்றை பொருத்தமான முறையில் வெளிப்படுத்தலே மனவெழுச்சி வளர்ச்சி எனக் கூறுதல் வேண்டும். இத்தகைய மனவெழுச்சிகளை இரு பிரிவுகளாக வகுக்கலாம்
1. அழிவு சார் மனவெழுச்சிகள்.
2. பாதுகாப்பு சார் மனவெழுச்சிகள்.
பயம், அச்சம், பதகளிப்பு. கோபம் போன்றன அழிவுசார் மனவெழுச்சிகளாகக் காட்டப்படுவதுடன் எதிர்மறைத் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றன. இத்தகைய மனவெழுச்சிகள் நன்னெறிப்படுத்தப்பட வேண்டியவையாகும். உடன்பான ஆக்கபூர்வமான மனவெழுச்சிகள் பாதுகாப்புசார் மனவெழுச்சிகளாகக் கொள்ளப்படுகின்றன. மேலும் மனவெழுச்சிகளை இரண்டு பிரிவுகளாக உளவியலாளர்கள் நோக்குகின்றனர்.
1. எளிமையானவை.
2. சிக்கலானவை
இதில் பயம், கோபம், பொறாமை போன்வை எளிமையானவை என்பதில் பெயின், றிபொற் மக்டூகல், உவாற்சன் போன்றோரிடத்து இணக்கம் காணப்படுகின்றது. முதல் நிலையான மனவெழுச்சிகளே எளிமையான மனவெழுச்சிகள் எனக் கூறப்படுகின்றன. பயம், கோபம், காதல் ஆகிய முதல் நிலையான மனவெழுச்pகளைத் தவிர்ந்த பிறமனவெழுச்pகள் அனைத்தும் சிக்கலான மனவெழுச்சிகளாகக் கொள்ளப்படும்.
பிளசிட் (1980) என்பவர் ஆரம்பம், இடைநிலை என மனவெழுச்சிகளை இருவகையாகக் காட்டியுள்ளார். இதில் ஆரம்ப மனவெழுச்சிகளாக மகிழ்ச்சி, ஏற்றுக்கொள்ளல், புதினம், பயம், துக்கம், அவமானம், எதிர்பார்ப்புக்கள், கோபம் முதலிய எட்டு விடயங்களையும் இடைநிலை மனவெழுச்சிகளாக ஆடம்பரம், அன்பு, வெட்கம் போன்ற வியங்களையும் குறிப்பிடுகின்றார்.
மனவெழுச்சியும் ஆளுமையும்
பிள்ளைகளின் மனவெழுச்சிகளுக்கும் ஆளுமைக்கும் இடையேயும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றன. எனவே மனவெழுச்சிகளை சிறந்த ஆளுமைத் தன்மைக்கு களம் அமைக்கத்தக்கதாக உருவாக்க வேண்டும். மனவெழுச்சிகளை அடக்காது சமூக நன்மை தரும் செயல்களிலே அவற்றைக் கிளர்ந்தெழச் செய்யும் போது மனவெழுச்சி வெளிப்பாடும் ஆளுமையும் சிறப்புப் பெறுவதைக் காணலாம்.
ஆளுமை விருத்தியில் மனவெழுச்சிகள் நேர்த்தாங்கங்களையும் நேரில் தாக்கங்களையும் விளைவிக்கின்றன. நேர்த்தாக்கங்களில் உடல், உளத்தொழிற்பாடுகள், மனோபாவங்கள், விருப்புக்கள் முதலியன குறிப்பிடப் படுகின்றன. இங்கு சகிப்புத் தன்மையும் முக்கியம் பெற்றிருக்கும். நேரில் மனவெழுச்சித் தாக்கம் ஏற்படும் போது பயம், கோபம், பொறாமை, மனமுறிவு போன்ற பண்புகள் விருத்தியடைவதைக் காணலாம்.
மனவெழுச்சிச் சமநிலை.மனவெழுச்சிகள் பிள்ளைகளின் நடத்தைப் பாங்கில் பல மாற்றங்களை ஏற்படுத்த வல்லன இதனால் உளவியலாளர்கள் மனவெழுச்சிச் சமநிலை எனும் எண்ணக்கரு தொடர்பாக நான்கு விடயங்களை குறிப்பிடுகின்றனர்.
1. பெருமளவு மகிழ்ச்சியான மனவெழுச்சிகளை அனுபவிக்கும் வேளை மகிழ்ச்சி தராத மனவெழுச்சிகளையும் குறிப்பிட்ட அளவில் வழங்க வேண்டும்.
2. மகிழ்ச்சி தராத மனவெழுச்சிகளுக்குரிய மொழி வெளிப்பாடுகள் நினைத்தவாறு மேற்கொள்ள முடியாதென்ற விளக்கத்தை ஏற்படுத்தல்.
3. இயலுமானவரை முன்கூட்டியே மகிழ்ச்சி தராத ஒரு மனவெழுச்சியை அனுபவிக்குமாறு சிறுவருக்கு வழங்குதல் வேண்டும்.
4. மகிழ்ச்சி தராத மனவெழுச்சிகள் தந்த மனப்பதிவுகளை அழித்துவிடல் வேண்டும்.
இத்தகைய உபாயங்களைக் கையாளுவதன் வாயிலாக இன்றைய போட்டிப் பண்பாட்டுக் கோலங்களின் மத்தியில் ஒருவரது மனவெழுச்சியை சமநிலைப்படுத்த முடியும்.
தீங்கான மனவெழுச்சிகளை இழிவளவாக்குதல்
பிள்ளைகளிடத்து மனவெழுச்சி தொடர்பான அதிர்ச்சிகளும் மனவெழுச்சிப் போராட்டங்களும் சீராக்கற் பிரச்சினைகளையும் நெறிபிறழ்வுகளையும் ஏற்படுத்த வல்லன. எனவே மனவெழுச்சிகளைக் கையாளவும் அடக்கியாளவும் சமநிலைப் படுத்தவும் கல்வி பயன்படத்தக்கதாக அமைதல் அவசியமாகும்.
சினம், வெறுப்பு, பொறாமை, முதலிய தீங்கான மனவெழுச்சிகளால் உளத்தாக்கங்களும் ஏற்படலாம். இவ்வாறாக தீங்கான மனவெழுச்சிகளை இழிவளவாக்கி நன்னெறிப்படுத்தக் கூடிய சில வழிவகைகளை பெரியோர்கள் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.
1. தீங்கான மனவெழுச்சிகளை ஏற்படுத்துகின்ற தூண்டிகளை நெறிப்படுத்தல் அல்லது பிரதியீடு செய்தல்.
2. மனவெழுச்சி முதிர்ச்சியை ஏற்படுத்தல் இம்மனவெழுச்சி முதிர்ச்சி காணப்பட்டாலேயே நேர்ப்பாங்கான மனப்பாங்கு பிள்ளைகளிடம் வளரும்..
3. மனவெழுச்சிக்குக் காரணமான செயலைப் பெரியோர் செய்து காட்டல்.
4. மனவெழுச்சி தோன்றுவதற்கான காரணிகளை அகற்றுவதற்காக வேறு விடயங்களில் மனதைச் செலுத்தச் செய்தல் எடுத்துக்காட்டாக தியானம் செய்தலைக் குறிப்பிடலாம்.
5. நல்ல மனவெழுச்சி தரும் சூழலை ஏற்படுத்தல்.
எனவே மனவெழுச்சி பிள்ளைகளின் நடத்தையிலும் விருத்தியிலும் மாற்றங்களை ஏற்படுத்துவதால் சிறப்பான மனவெழுச்சிகளை ஏற்படுத்தக் கூடிய சூழலை உருவாக்கி ஆளுமையுடைய எதிர்காலப் பிரஜைகளை உருவாக்குதல் ஆசிரியரதும் முழுச்சமூகத்தினதும் தார்மீகக் கடப்பாடாக உள்ளது.
உசாத்துணைகள்.
1. அருள்மொழி.செ., (2010), பிள்ளை வளர்சியும் கற்றலும், ராஜா புத்தக நிலையம் மட்டக்களப்பு.
2. பெனடிக்பாலன்,யோ.(2008) கல்வி உளவியல் அடிப்படைகள். பூபால சிங்கம் புத்தகசாலை கொழும்பு.
3. நவரட்ணம்,உ (2007) கற்றல் கற்பித்தல் செயன்முறையில் கல்வி உளவியல், குமரன் புத்தக இல்லம், சென்னை.
4. ராமலிங்கம்,பா. (2005) கல்வியும் உளவியலும், ராஜகுமாரி பதிப்பகம். சென்னை.
5. ஜெயராசா,சபா.(2005) குழந்தை உளவியலும் கல்வியும், பூபாலசிங்கம் புத்தக நிலையம், கொழும்பு.
6. ஜெயராசா,சபா.(2008). கற்றல் உளவியல், சேமமடு புத்தகசாலை, கொழும்பு – 11.
ரவிகிருஷ்ணா
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு
Comments
Post a Comment