செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய காவடிச் சிந்து

செட்டிபாளையம் கண்ணகியம்மன் ஆலய காவடிச் சிந்து

சற்குருவாம்ம் தும்பிக்கையுடையோனே
தொந்திவயிற்றப்பனாம் பிள்ளையாரே
செட்டிநகர் பொற்பதமாய் உறைந்திருக்கும்
கண்ணகைத் தாயை நான் முன்னிருத்தி
காவடிச் சிந்துதனை கற்பகமாய் உன்
பொற்பாதம் தரவென்று நான் நினைந்தேன்
எந்தன் நெஞ்சினுக்கு நிறைவு செய்வாய் எங்கள்
கிரான்குளத்துப் பிள்ளையாரே அருள்செய்வாயே

சார்பான கிரான்குளச் சந்நிதியில்
வாயலகுமிட்டு முதுகுதனில் முள்ளும் பாய்ச்சி
கண்ணகையே உனைத் தேடிவாறேன்
என்கால்கள் வருந்திநிற்க
பொற்பதமாய் நீசெய்த கருணைதனை
என்றும் நான் மறக்கவே கூடுதில்லை
தற்பரமாய் என்னுள் வந்து தயவுடனே
நோக்காட்டும் செயலறுத்து அருள்செய்வாயே

சிங்காரத் தோப்பதனில் மரம்சூழ வீற்றிருந்து
சிந்தையுடன் வருவோர்க்கு அருளுமெய்தாய்
உன்பதத்தை எய்தவென்று நானும்
தோழ்தனிலே காவடியும் வருந்திச் சுமந்து
வாழ்வுதனை எண்ணிநானும் வாய்மொழியால்
உனக்கு ஒரு சிந்து செய்தேன் 
மருதமரச் சோலையிலே இலங்கும் தேவி
என் கவலைகள் களைந்தெனக்கு அருள்செய்வாயே

சீரான மாந்தருக்குச் சிந்தை செய்து
சிற்பரத்தில் வியோகமதாய் ஆகிநின்று
விரதமதைக் கடைப்பிடித்துப்
போசுகின்ற வார்த்தையலே நேர்த்தி செய்து
மங்காத ஒளிகொடுத்து மகிமை செய்து
கற்பகமாய் காலகாலனைத்தான் துரத்தி
சிறையாக இருக்குமென் நெஞ்சினுக்குச் சிந்தை செய்வாய்
பத்தினியே பராபரியே அருள்செய்வாயே

சுந்தரத்தில் நிறைந்த மஞ்சள்
திருகாணி வைத்த சட்டியலே பிசைந்தெடுத்து
அடியார்கள் புடைதானே சூழ்ந்துநிற்க
புத்தாடை பட்டாக நீயுடுத்தி
கூழான மஞ்சள்தனைத் தெளித்துநிதம்
குளிர்த்தியாம் திங்களிலே நீயும் கண்டாய்
கோவலனின் பத்தினியே அருள்செய்வாயே

சூரபத்மன் னையே வதமும் செய்த 
ஆறுமுகன் சந்நிதியே போற்றுதல் போல்
பத்தினியாய் வந்துதித்த கண்ணகையே
மதுரையை எரித்து நீயும் சத்தியமே செய்குவித்தாய்
பாண்டிய மன்னனும் மாண்டு போனான்
கோப்பெருந்தேவியுமுடனே சென்றாள்
சிலப்பதிகாரமுறை நாயகியே அருகில்வந்து
செட்டிநகர் உறைபவளே அருள்செய்வாயே

செந்நிறத்தில் காவடியும் கட்டி
காவினைத் தரித்துநானும் வாறேனம்மா
பொற்பமாய் இலங்கிநின்று
நீக்கிவிடு குறைகளையே நீயேயென்றும்
பற்பல காலமதாய் பழகிவந்த 
சொந்தங்கள் இன்றுதானும் இல்லையம்மா
திறப்பூராம் கிரான்குள்தில் உறவுவைத்தாய்
செட்டிநகர்ப் பத்தினியே அருள்செய்வாயே

சேதிகள் கேட்கலையோ தாயேயம்மா
மட்டுமா நகரதனின் தென்பாலாய் அமர்ந்துகொண்டாய்
கழனகள் சூழ்ந்திடவே கற்பகச் சோலையிலே
வைகாசித் திங்களிலே சடங்கும் கண்டாய்
உன்னருள் பெறவேயென்று கூடுகின்றார்
உன்னுடைய பொற்பமாம் சந்நிதியில்
காத்தருள வேண்டுமம்மா கற்பக வல்லியேநீ
பத்தினியாகவந்தே அருள்செய்வாயே

சைகைகளைக் காட்டிடுவாய் தாயேயம்மா
சற்குருவாய் நீயிருந்து சேதி சொல்வாய்
கண்கண்ட யெ;வமாக விளங்குகின்றாய்
கோபம் தனைத்தனித்து தாகத்தையே தீர்த்திடுவாய்
கிரான்குளப் பதிக்கு நியும் உறவுகொண்டாய்
கோவலனை அரவணைத்து வெற்றிகண்டாய்
வருந்துகிறேன் நெடுநாயாய் நானும்
வித்தகையே கண்ணகையே அருள்செய்வாயே

சொற்பனத்தின் அருகிருந்து காத்திடுவாய்
சோதிவடிவாக நீயும் வீற்றிருப்பாய்
கற்புடை மகளிரின் காவியத்தில் சிறந்துநின்றாய்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டச் செய்தாய்
உரைசால் பத்தினியாய் நீயும் நின்று
உயர்ந்தோர்கள் போற்றுகின்ற வாழ்வும் கண்டாய்
அரசியலைப் பிழைக்கச் செய்த மாந்தருக்கே
அறத்தினுக்கே கூற்றுவனாகவந்து அருள்செய்வாயே

சோலையூராம் காவிரிப் பூம் பட்டினத்தாளே
பழங்குடி வணிகராம் மரபினிலே Nhன்றினாளே
இயலிசை நாடகமாம் முத்தமிழால் விரவப்பெற்ற
உன்னத காவியத்தில் இடம்பிடித்தாய்
சேரநாடு சோழநாடு பாண்டிநாடு மூன்றுநாட்டின்
புகார் மதுரை வஞ்சியாம் நகரங்களின்
புகழுரைக்கும் காவியமாம் நீயும் கொண்டாய்
பத்தினியே பராபரியே அருள்செய்வாயே

சௌக்கியமாம் சொக்கிய வாழ்வும் தந்தாய்
தாயான பராபரி அருள்தான் செய்வாய்
பூபாளராகம் கேட்க மறுத்தாய் தாயே
தனித்துநீயும் தயவாக அமர்ந்து கொண்டாய்
வக்கணமாய் கற்பூர தீபமேந்தும் பக்தர்குளாம்
காவடிகள் ஆடிவர நின்றிருக்கும்
மஞ்களிலே குளிர்;தி காணும் பழந்தமழ் மரபினளே
பத்தினியாகவந்தே அருள்செய்வாயே

 ஆக்கம் :- ரவிகிருஷ்ணா
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம்
மட்டக்களப்பு

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை