எது சுதந்திரம்
எது சுதந்திரம்
=============
எது சுதந்திரம்?
சங்கிலிகள் உடைத்தெறிந்து
மனம் தன்னைத் திறந்த நொடியா?
பேச உரிமை கிடைத்த பொழுதா
பேசாமல் இருக்கத் தீர்வு
கிடைத்த வலுவா?
பயம் இல்லாத
நட்புறவுப் பாதையா
பயத்துடன் நடந்தாலும்
தலை தன்னை நிமிர்த்திடும் தைரியமா?
வானமது எல்லையா
எல்லையை மறக்கும்
மிடுக்குப் பார்வையா?
வயிறு நிரம்பும் பிண்டமா
பிறருக்குப் பகிரும் பண்டமா?
புள்ளடி போடும் விரலா
நீதி தேடும் குரலா?
ஆணை மறுக்கும் நிறை தைரியமா
தவறை ஒப்புக்கொள்ளும் பணிவா?
மதம் தாண்டும் மனிதமா
மொழியும் தாண்டும் அன்புடமையா?
நிறம் தாண்டிடும் நட்பா
இனம் தாண்டும் சமத்துவமா?
கல்வி தருவிக்கும் கண்களா
கேள்விகள் கேட்கின்ற துணிவா?
உழைப்பின் வியர்வைத் துளிகளா
வியர்வைத் துளிகளுக்கு மதிப்பா?
மனங்கொளும் சிரிப்பா
பேதைமைக் களிப்பா?
குழந்தையாய் கனவா
கனவுகள் கலைக்காத உலகா?
இயற்கையின் சுவாசமா
அதை துணிவுடன் காக்கின்ற பொறுப்பா?
சட்டத்தை எழுதிடும் கையா
மனிதத்தை எழுதிடும் மனமா?
எதிர்ப்பினைச் சகிப்பதா
வேறுபாட்டை வாழ்த்துவதா?
மௌனத்தை உடைக்கின்ற குரலா
குரலதைக் காயப்படுத்திடா செவிகளா?
நினைவுகளை மதிப்பதா
எதிர்காலத்தை வடிவமைப்பதா?
அரசியலின் வாக்குறுதியா
வாழ்க்கையின் உண்மைப் பாடமா?
தனிமையில் தைரியமா
கூட்டத்தில் நேர்மையா?
உரிமை மட்டும் அல்ல அதனோடு
பொறுப்பும் சேர்ந்த பயணமா?
மற்றவரின் வலியதில் துடிப்பா
தன் வலியும் தாண்டுகின்ற மதிப்பா?
சுதந்திரம் ஒரு கொடி அல்ல
அது தினசரி நடைபாதை
மனிதனாய் இருப்பதற்கான முயற்சி
மனிதனை விடுவிக்கும் பண்பு
அதுவே சுதந்திரம்
___________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்

Comments
Post a Comment