பறக்கும் நாணேறிய அம்புகள்


பறக்கும் நாணேறிய அம்புகள்

அன்று காலை கதிரோன் தன் செவ்வொளியை செப்பனிட்டு பிரகாசிக்க ஆரம்பிக்க ஆறுமுகன் மெல்ல எழுந்து இறைவன் பொருட்டுச் சாத்துவதற்காக வண்டுகள் மொய்க்குமுன்னே பூக்களைக் கொய்ய ஆரம்பித்தான் அப்போது அவனது நெஞ்சத்தே பழைய நினைவுகள் மலர ஆரம்பித்தன.

அவன் ஒரு கூலித் தொழிலாளி ஆயினும் ஒன்றிலும் சளைத்தவனல்ல (கட்டிடம் கட்டுதல், தச்சுத் தொழில், வேளான்மை வெட்டுதல், பயிர் செய்தல் எனச் சகலதும்) இத்தனைக்கும் அவன் தரம் ஐந்து வரையே கற்றவன் அவன் பெற்ற அனுபவங்களால் தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் எழுத வாசிக்க கற்றுக் கொண்டவன் சிங்களத்தை சிக்கெடுத்து வாசித்து சிதையாது எழுதும் வல்லமையும் கொண்டவன்.

தனது மனைவியிடமும் நான்கு பிள்ளைகள் மீதும் பாலும் தேனும் போல மிகுந்த அன்பு கொண்டவன் இலங்கை மண் சந்தித்த யுத்த அவலம் இவன் வாழ்விலும் ஊடுருவ மறுக்கவில்லை மட்டுமன்றி சமநிலை கொள்ளமுடியாத தோல்விகள் பல கண்டவன்.

ஒரு நாள் காலை வேலைக்குச் செல்லத் தயாராகும் போது துப்பாக்கி ரவைகள் பெரும் சத்தத்தோடு அணிவகுத்து தன் வீட்டிற்கு மேலே செல்ல  'என்னடி மாரி அது பெரும் சத்தமாக் கிடக்கு நீ இங்க நிக்காம ஓடு உள்ள' என்று கூற மாரியோ 'வேலையில்லாட்டிப் பறவால்ல உயிருதான் முக்கியம் நாளைக்குப் பாப்பம் வாங்க' என்று கூற தம் பிள்ளைகளை மனதிருத்தி கடவுளை வேண்டியவனாய் மெல்ல தன் உந்துருளியைத் தள்ளிச் செல்ல அரச படைகள் கல்லெறிபட்ட தேனிக்களாய் அவனை வளைத்து இட்டன பல சோதனைகள் மெனியெல்லாம் நடு நடுங்க திக்குத் தெரியாது தடுமாற 'டேய் எங்க போறது' 'யாருடா நீ' 'பேர் என்ன?' 'வீடு எங்;;;;;;;;;;;;;;;;;;க' கொட்டியா வந்தது' என்று அவனது நடையுடை பாவனை பார்த்து பல கேள்விகள் காதுகளைப் பீரங்கி வாய் வைத்துப் பிளக்க 'ஐயா நான் வேலைக்குப் போறன்' என்று கூற துப்பாக்கியின் பின்புறங்கள் அவனது மேனியெல்லாம் வெளுத்துக் கட்ட வாட்டாக்களின் மிதி பகுதி அவனது முதுகை பதம் பார்க்க 'ஐயா என்ன விடுங்கையா எனக்குத் தெரியாதையா' என்று கத்த மாரியோ 'ஐயா அவருக்கு ஒன்றும் தெரியாதையா அவர விடுங்கையா' என்று கூற வந்த படையில் ஓராள் மாரியின் இறுக்கமான கொண்டையை பிடித்து இழுத்துக்கொண்டு 'ஓடுடி' என்று துப்பாக்கியைக் காட்டி ஆவேசம் கொள்ள அடுத்தடுத்து அணிவகுத்த கவச வாகனங்களில் ஒன்றில் ஏற்றப்பட்டு ஆறுமுகனைக் கொண்டு சென்றுவிட்டார்கள். 

மாரியின் கண்கள் மயங்க பிள்ளைகள் ஏக்கத்தில் உறைய வீடே நிசப்தமாகக் கிடந்தது. மணி பிற்பகல் 5 மணியையும் தாண்டிவிட்டது எங்கு கொண்டு போனார்கள் என்பது தெரியாது திடீரென விழித்தவளாய் தனது பிள்ளைகளை தனது அக்காவின் வீட்டில் விட்டு தன் தந்தை கதிர்காமரை அழைத்து கிருஷ்ணணைத் தேட ஆரம்பிக்கின்றாள். அப்போது தூரத்தில் ஓர் உருவம் தெரிகிறது அது தன் கணவனாக இருக்கக்கூடாதா என்று வழிமேல் விழிவைத்தவளாய் ஏக்கத்தோடுவீறு நடையுடன் செல்கின்றாள்.

பார்த்தால் ஆறுமுகன் தனது உந்துருளியை மெதுவாகத் தள்ளியபடி வர ஓடிச்சென்று கரம் பற்றினாள் கதிர்காமர் துவிச்சக்கரவண்டியை வாங்கி தள்ளிவர வீட்டை அடைகின்றாள். இவ்வாறான சூழ்நிலைக்கும் மத்தியில் கல்வியின் அருமை பெருமையறிந்து தனது நான்கு பிள்ளைகளையும் படிப்பித்து ஆளாக்க வேண்டும். எனும் இறுமாப்பு அவளைவிட்டு அகலவில்லை எப்படியாவது தனது செல்வங்களை ஒரு நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் எனும் ஏக்கத்தோடு வாழ்க்கைப் பயணம் தொடர்கின்றது.

இவ்வேளை இக்கிராமத்தில் இரத்தினம் என்பவர் வாழையடி வாழையாக வசதி வாய்ப்புக்களைக் கொண்டவராக இருந்த அதேவேளை கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தை அடிமைகளாகவும் வைத்து நடாத்தியும் வந்தார். இது இவ்வாறு இருக்கையில் ஆறுமுகனும் அவர் கண்ணில் பட்டான். 'ஏன்டாப்பா ஆறா இங்கவா நம்மட காணில கொஞ்சம் வேல கிடக்கு நீயும் கஷ்டத்தில இருக்கிறதா முருகு சொன்னான் வந்து வேல செய்திட்டு பிள்ளைகளுக்கு ஏதும் வாங்கிட்டுப் போலாமல்லோ' என்று கூற சற்றுத் தாமதித்து நான் நாளைக்கு வாறனையா என்று கூறிச் செல்கிறான்.

மறுநாள் சூரியன் கதிர் விரிக்குமுன்னே ஆறன் இரத்தினத்தின் காணிக்குள் மண்வெட்டியுடன் உலாவுகின்றான். இரத்தினமோ ராஜாவாட்டம் நடையுடன் வந்து வேலைகளை ஒவ்வொன்றாக உரைக்க அனைத்தையும் சளைப்பின்றி செய்து முடிக்கின்றான். நிறமதியம் பாராது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தன் மகவுகட்காய் வியர்வை சிந்தி செய்த வேலைகட்கு இரத்தினம் கொடுத்த வெகுமதிகள் போதியதாய் இல்லை சலிப்பு வந்தாலும் கூழ்நிலையை சமாளிக்க வேறு வழியின்றி மீண்டும் சென்று வேலை செய்கின்றான். 

இவ்வாறு வரும் தருணங்களில் ஆறுமுகனின் மூத்தமகன் கல்வியில் சிறந்த விளங்குவதை அவதானித்த இரத்தினத்தால் பொறுக்க இயலாது 'ஏன் ஆறா நீ உழைப்பது உன் குடும்பத்துக்குக் காணுமா நீ உதவிக்கு உண்ட மகனையும் அழைத்து வாவன் நான் அவனுக்கும் என்னமும் பாத்துப் போட்டுக் குடுக்கிறனே' என்று கூற ' இல்லையையா இல்லை கண்ணுக்குக் கண்ணாக வளர்த்த என் மகன் படிக்க வேண்டும். பரிசில்கள் பல பெறவேண்டும' ஊரே அவனைப் புகழ வேண்டும். அதைப்பார்த்து நானும் என் மனைவியும் மகிழ வேண்டும். என்பதே எனது ஆசை' என்றான்.

அப்போது மனச்சுழிப்பாய் 'சரி..சரி.. அப்ப பின்ன என்னதான் செய்ற நீ தொடர்ந்தும் கஷ்டப்படப்போற நாலும் ஆண் பிள்ளை அதுல ஒண்ட ஒத்தாசிக்கு எடுத்தா என்ன' என்று இரத்தினம் கூற இல்லையையா இல்லை வேண்டாம் என்று கூற சரி...சரி... நான் வாறன் என்று கூறி செல்கிறார்.

இவ்விடயம் தரம் 10 பயிலும் மன்னவனின் காதிற்கு எட்டுகின்றது. மன்னவன் செய்வதறியாது தடுமாற ஆறுமுகன் நான் இருக்கும் வரைக்கும் என் பிள்ளைகள் கஷ்டப்படக்கூடாது. என்று கூறி மறுநாள் வேலைக்குச் செல்கிறான். இரத்தினம் 'ஆறா நீ நேற்று கதச்சத மறந்திடு நான் உண்ட கஷ்டத்த பாத்துத்தான் அப்படிச் சொன்னனான் அத மனதில் வச்சி நீயும் வேலைக்க வராம விட்டுடாத' என்று கூறி தொடர்ந்து ' விரும்பினால் உண்ட மகன் பாடசாலை நேரம் தவிர மற்ற நேரம் வந்து தண்ணி பாய்ச்சட்டும், பயிர பராமரிக்கட்டும் சின்னச் சின்ன வேலைகளைச் செய்யட்டும். நான் பாத்து என்னமுங் கவனிக்கிறன். அவன் அத படிப்புச் செலவுக்கு எடுக்கட்டுமே' என்று கூற குடும்பத்தின் கஷ்ட நிலையால் சற்று தன் கொள்கையை மாற்ற நினைக்கின்றான் ஆறன். இருப்பினும் தன் மகனின் பிஞ்சுக் கரங்கள் மருத்துவிடும் என்ற கவலையும் இருந்தது. எதற்கும் மகனின் நிலையை பார்ப்போம் என்றவனாய் வீடு செல்ல மகன் முழு சம்மதத்தோடு பாடசாலை பி.ப 1.30 மணிக்கு நிறைவுற்றதும் வீடு வந்து பி.ப 3.00 மணிக்கு அணிவன அணிந்து புனைவன புனைந்து புதிய விவசாய வேலையாளாக இரத்தினத்தின் காணிக்குள் நுளைகின்றான். அங்கு பல தமக்கென வாழா தகைமையுடையோரான அடிமைகள் வேலை செய்வது அவனுக்குத் தெரியாது இருப்பினும் அன்று பல முகங்களைக் காண்கின்றான். அன்றைய தினம் அவனுக்கு தண்ணீர் பாய்ச்ச பணிக்கப்பட்டது அவன் சளைக்காது அதை செய்து முடிக்கின்றான்;.

இப்படியாக நாளும் சிறு சிறு வேலைகள் வழங்கப்பட்டாலும் வெகுமதிகளோ குறைவு. ஒரு நாள் இரத்தினம் 'மன்னவா நீ விரும்பினால் வார விடுமுறை நாட்களிலும் வந்து வேலை செய்யலாம்' என்று கூறினார். மன்னவனும் ஏற்றுக் கொண்டு தனது படிப்பிற்கு அப்பியாசக் கொப்பிகள் வாங்க உதவும் எனக் கருதி செல்கின்றான். 

இப்படியாக வரும் போது ஒருநாள் இரத்தினம் கேள்வியுறுகின்றார். மன்னவன்தான் வகுப்பில் முதல் பிள்ளை என்றும் தனது பிள்ளைகள் பின்னடைவான நிலையிலும் இருப்பதை அறிந்தார். இதனால் அவருக்கு மன்னவன் மீது பொறாமையும் கோபமும் ஏற்பட்டது. மறுநாள் வேலைக்கு வந்த மன்னவனைப் பார்த்து 'மன்னவா நீ வேலைக்கு வருவதென்றால் வா இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் போவதென்றால் போ ரெண்டையும் செய்யேலாது என்ன செய்யப்போற' என்று உள்ளொன்று வதை;து புறமொன்று கேட்டார் மன்னவன் கதிகலங்கி 'ஐயா நான் என்ன தப்பு செஞ்சன் ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்' என்று கேட்டான் 'அப்படி ஒன்றுமில்லை எமது பண்ணையில் பயிர்கள் பெருகிப்போச்சி அதால மேலும் ஆட்கள் தேவை நீ நிரந்தரமாய் நில்' என்றார். மன்மதனோ 'இல்லையையா நான் அப்பாவிடம் கேட்க வேணும் என்று கூறினான் இரத்தினமோ 'அப்படியானால் இப்பவே போய் கேட்டுவா' என்னறார்.
மன்னவன் 'சரிiயா' எனக் கூறி வீட்டுக்குச் சென்று நடந்தவற்றை பெற்றோரிடம் கூறினான். தந்தையோ 'இல்லை மகனே படிப்ப விட்டுப்போடாத நமக்கு நிலம் கிடக்கு அத வித்தாவது நான் படிப்பிப்பன் கவலை கொள்ளாதப்பா' என்று கூறியதோடு இரத்தினத்திடம் மகனை வேலைக்கு அனுப்பாது தானும் செல்வதை நிறுத்திவிட்டார். இரத்தினமோ மன்னவன் இன்று எப்படியும் வேலைக்கு வருவான் என அகமும் முகமும் மலர்ந்து எதிர்பார்த்துத் தோற்றுப் போனார்.

கால ஓட்டத்தில் ஆறுமுகன் தனது சொத்துக்கள் நிலபுலன்கள் போன்றவற்றை இழந்தாலும் மன்னவன் தன் முயற்சியினால் மருத்துவத் துறையில் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றான் அதன் பின்னர் யுத்த சூழலின் கனதியால் ஆறுமுகனின் இரு புதல்வர்கள் வெளிநாட்டு வாசம் அனுபவிக்க இன்னுமோர் புதல்வனான மணாளன் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றான்.

பிற்காலத்தில் ஆறனின் மூத்த மகன் வைத்தியராகவும் மற்றுமொருவன் ஆசிரியராகவும் சேவைசெய்ய ஏனைய இரு புதல்வர்களும் குடும்பத்தின் கஷ்டம் களைந்து இன்புறுத்த இரு பட்டமளிப்பு விழாக்கண்டு இன்புற்றான் ஆறன். இருப்பினும் இரத்தினத்தின் மூன்று பிள்ளைகளில் ஒன்று கூட உருப்படவில்லை ஒரு பிள்ளைகூட பிற்காலத்தில் அரச தொழிலில் இணையவில்லை அவரைப்போன்று ஊதாரிகளாக அலையும் நிலையே ஏற்பட்டது. மட்டுமன்றி இரத்தினத்திடம் அடிமைகளாய் வேலை செய்தவர்கள் வெளியில் கூலியாட்கள் பெறும் சம்டபளம் பார்த்து வாய்பிளந்து இரத்தினத்திடம் இருந்து தப்பிச் சென்றுவிட்னர்.

பின்னர் இரத்தினம் தனது பண்ணையை கொண்டு நடாத்த முடியாமல் அதனை விற்கத் திட்டமிட்டார் அதுவும் முடியாமல் போக இறுதியில் கேட்பாரற்ற நிலமாய் கிடக்க தம் பிள்ளைகளுக்கு பிரத்துக் கொடுத்து விட்டு தன் வீட்டில் தனிக் கட்டைபோல் வாழும் நிலையை பெற்றார். அனால் ஆறுமுகனின் பிள்ளைகளோ ஆறுமுகனையும் மனைவியையும் நன்றாகப் பார்த்து வந்தார்கள் இதைக்கண்டு பொறாமைகொண்ட இரத்தினத்தால் எதுவும் பேச முடியவில்லை கவலையுடன் வாழ்க்கையை ஓட்டினார்.

ஒருநாள் தனது தாங்கு தடியுடன் கடைவரை செல்ல எண்ணி வீதியில் நடந்துகொண்டிருந்தார் அப்போது வீதியால் ஒருவர் வந்து கொண்டிருந்தார் அவரைப் பார்த்து இரத்தினம் யாரப்பா நீ யாரைத் தேடுகிறாய்' என்று கேட்டார் வந்தவரோ 'ஐயா நான் யாரையும் தேடவில்லை என் வீட்டுக்குப் போறன் என்றார். சற்று யோசித்தவராய் ''என்னது வீட்டுக்குப் போறயா யாரப்பா நீ யாரு' என்றார் பதிலாய் ' நான்தான் உங்கள்ட்ட வேலைபார்த்த மன்னவன்' என்று கூற 'என்னது மன்னவனா' என்று கேட்க 'ஓமையா' என்று மன்னவன் பதிலளிக்க 'சரி நீ இப்ப என்ன வேல பாக்கிற' என்று இரத்தினம் கேட்க மன்னவன் 'நான் ஒரு டொக்டரா இருக்கன் உங்களுக்கும் ஏதும் சுகவீனம் எண்டால் சொல்லுங்கோ நான் வந்து பாக்கிறன்' என்று கூறி செல்கிறான்.   

இரத்தினமோ கவலையை மனதிருத்தி ' அன்று ஆறன் தன்மனம் என்ற வில்லிலே உறுதி என்ற அம்புகளால் பிள்ளைகளின் வாழ்க்கைச் சக்கரத்தை நாணேற்றினான் பிற்காலத்தில் அவை சிறகடித்துப் பறக்கும் சிட்டுகளாய் உலாவருகின்றன' என எண்ணியவராய் கூனிக் குறகிப் போய் பேச வார்த்தையின்றி வாழ்வைக்கடத்த ஆரம்பித்தார். மணியொலி காதுகளைத் துளைக்க மீண்டும் தன் நினைவலைக்கு வந்து பூக்களைக் கொய்து கொண்டு சென்றான் ஆறன் இனிமையான இன்காலைப் பொழுதில்.

மண்முனைப்பற்று சிகரம் சஞ்சிகையில் வெளியான சிறுகதை

  ரவிகிருஷ்ணா 
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் 
மட்/கிரான் குளம்
ஈழம்


Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை