கிராமத்து வாசம்
கிராமத்து வாசம்
மக்கள் கூட்டம் தமக்குத் தேவையான பொருளையெலாம் அவசர அவசரமாக வாங்கிக்கொண்டு தத்தமது வீடுகட்கு செல்லும் வாகன இரைச்சல் காதுகளைத் துளைக்க எஸ்.எல்.ஏ.எஸ் ஒப்பிசரான சுதன் தனது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகட்கும் எவ்விடர்களும் வராமல் இருப்பதுடன் உலகமுய்யும் அனைத்து உயிர்களையும் காக்கவும் வேண்டி கடவுளை வணங்கி இராப்போசனம் முடித்து உறக்கத்திற்கு செல்ல ஆயத்தமானான் நகரம் என்ற பேரில் நரகமாக காட்சி தரும் அலங்கோல மேடை என எண்ணி கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கமில்லை ஏசியின் காதுகளை முறுக்கியும் உறக்கமில்லை மின்விசிறி குறைவாக சுழல்கிறதோ என கையால் சுத்திவிட எத்தனிக்கும் மனம் இத்தனைக்கும் மத்தியில் தான் போறனை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாழி போல் இருப்பதாக எண்ணுகின்றான்.
உறக்கம் கலைக்கும் சூழலை எண்ணி வருந்தி தமது கிராமத்து வாசத்தை மீட்டலானான். ஆமாம் அது ஓரு செழிப்பான வனப்புமிக்க கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்றில் அமைந்துள்ள கிரான்குளம்தான் அவனது ஊர். கிராமத்தின் மேற்கே மீன்பாடும் வாவியது வயல்களோடு வரிசைகட்டி நிழல் மரச் சோலைகளுடன் அழகு செய்ய கிழக்கிலே வங்கக் கடலாம் இந்துமா சமுத்திரமும் பசுவினோடு ஆடு மேயும் அழகிய நிலமகளும் பரவிக்கிடக்க தெற்கிலே குருக்கள்மடத்தூரும் வடக்கிலே புதுக்குடியிருப்பூரும் இருக்கைகொள்ள நடுவனதாய் நர்த்தனம் கொண்டதுவாம் இவ்வூர்
தினமும் காலையிலே படிப்பதற்காய் 4.00 மணி கோயில்மணி ஒலிக்கும் நேரம் 'சுதனையா எழுந்திருங்கோ 4.00 மணி கோயில்மணி ஓசையப்பா நாலும் படித்து நல்லவராக ரம்யமான நேரமப்பா' என்று கூறி எழுப்பிடுவார் அவன் தந்தை. சுதனுமோ கைகள் கால்கள் விரித்து மடமடக்க சோம்பேறி முறித்து முனகி உடலை ஒருவாறு சரி செய்து படிக்கத் தயாராக தந்தையோ 'வேப்பங் குச்சியினால் பல்லைத் துலக்கி வாயைக்கழுவி இந்தப் பாலைக் குடித்து குந்தியில் அமருமையா' 'படிப்பு வரும் நன்றாய் வரும்' என்று கூறுவார். சுதனும் சுதாகரித்து படிக்க ஆரம்பிக்க தாயோ ஒத்தாசையாய் இருந்து பனையோலை விசிறி கொண்டு விசிக்கி விசிக்கி கொசுவை விரட்ட சுதனோ 'வேணாம்மா வேணா நீ போய் படும்மா விடியட்டும்' தாயோ 'இல்லடாமனே கொசு திரியிது சீ படி நானென்ன மலையா பொளக்கப்பறன் நீ படி படி' என்று கூறி மீண்டும் விசுக்க ஆரம்பிக்கின்றாள். 'என்னமோ போம்மா' என்று கூறி படிக்க ஆரம்பிக்கின்றான் அவனது தங்கை தூக்கத்தில் இருக்கின்றாள். அவள்மீதும் கொசுக்கள் வரிசையிடக்கண்டு 'அம்மா அம்மா அங்க பாரும்மா புள்ளய விடுதில்ல கொசு' என்கின்றான் தாயோ 'கொசு என்ன கொசு பாம்பே வந்தாலும் அவ குறட்டையை விடவே மாட்டாள் நீபடி படி' என்று படிப்பின் பக்கம் தாய் திசைதிருப்புகின்றாள்.
அவன் தங்கை மதியோ படிப்பில் கெட்டிக்காரி ஆனால் வீட்டில் படிப்பது குறைவு வேலைக்கள்ளி சண்டைக்காரி தன்னுடன் அவள் செய்யும் குறும்புகளை எண்ணி புன்னகைக்க அம்மாவோ 'ஏன்மன சிரிகிறா படியன்' தெளிவடைந்தவனாய் படிக்கத் தொடங்குகின்றான்.
விடியும்போது தாய் மாதவியோ வாசலில் அழகான கோலமிட்டு அழகாய் அலங்கரித்து விரும்பும் மணச்சாம்ராணி தூபமிட்டு காலைப் பொழுதை வரவேற்கின்றாள். தந்தை கிருஷ்ணனோ விடியும் முன்னே தொழுவத்திலிருந்து மாடுகளை ஓட்டிச் சென்று வயலுக்கும் நீர் பாய்ச்சித் திரும்பிவிட்டார்.
மாதவியோ வகைவகையாய் உணவு செய்வாள் அன்று காலை சுதன் 'அம்மா என்னசாப்பாடு செய்றயல்' என்று கேட்க 'அதப்பா..' என்பதற்குள் 'எனக்கு பயற்றம் உருண்டைதான் வேணும்' என்று அவன் தங்கை மதி கூற தாயோ 'நேத்தைக்கி நீ சொன்னத செஞ்சல்லா பொண்ணே இண்டைக்கி அண்ணாவுக்கு பிடிச்ச பாற்சோறும் கட்டச் சம்பலும் பண்ணப்போறன்'. சுதனோ 'இல்லம்மா இந்த வாயாடி கண் வச்சா நான் வாந்தி எடுத்திடுவன் அவ கேட்டதையே செய்' மதியோ 'ஐயையோ இந்த அம்மா இந்த பயத்தங்கா பயளுக்கு பாற் சோறயே பண்ணுங்க நான் கொஞ்சம் கண்ணத் திருப்பிக்கிறன்' என்று கூறி இடுப்பில் கையை வைத்து ஆடிக் காட்டிவிட்டு ஓடுகின்றாள் அன்றைய தினம் பூரணை விடுமுறை என்பதால் இருவரும் வீட்டிலேயே இருக்கின்றார்கள்.
அவர்களின் வீடு நெடியவரின் இரட்டைமாட்டுக் கரத்தை மூலம் சுட்டகாட்டில் இருந்து சுமத்திவரப்பட்ட மரங்களைச் சுமத்தி நிற்கும் இரண்டறையுடன் கூடிய விறாந்தையை கொண்ட மண் வீடாகும். சற்றுத் தள்ளியதாய் அடுக்களை அமைந்துள்ளது. களிமண் வீடானாலும் பாட்டி இராசம் சாணம் போட்டு மெழுகி விட்டாரெண்டால் அதற்குப்பிறகு சாப்பைப் பாய் ஒன்று தருவா போட்டு படுத்தா விடிவதே தெரியாத உறக்கம் வரும் சொல்லி விளக்கவே முடியாது. பகலிலே ஏசியை வெல்லும் குளுகுளென்ற குளுமை மட்டுமா தென்னை இளங்காற்றின் தாலாட்டு விசேட தினங்களென்றால் பலகாரமும் முறுக்கும், குரக்கன் கூழும் சொல்லவும் வேணுமோ? வெளுத்துக் கட்டவேண்டியதுதான்.
வீடு இருக்கும் வளவு விசாலமானது அங்கு இல்லாத மரங்களென்ன வெயிலைத் தணிக்கத் தோடை, காற்றில் சிறகசைக்கும் தென்னைகள், குலைகளைத் தாங்கி நிற்கும் வாழை மரங்கள், அடிமுதல் முடிவரை மத்தளமாய் காய்கள் தொங்கும் பலாமரங்கள், மட்டுமா மாதுளை, அன்னமின்னா, மாமரங்கள் கொய்யா மரங்கள் எனக் கூறிக்கொண்டே போகலாம். ஒருமுறை பெரிய பலாப்பழம் ஒன்று பழுத்தது கிருஷ்ணன் தமக்கு மட்டுமன்றி தனது சுற்றத்தவருக்கும் பங்குவைத்து பகிர்ந்துண்பதே நலம் என்று சுற்றத்தாருக்கும் சிறு கூறுகளாக்கி கொடுத்திருக்கின்றார். இவையெல்லாம் கூட்டுக்குடும்ப ஞாபகங்களை மேலௌச் செய்தன.
விடுமுறை காலங்களில் அயலில் உள்ள தனது நண்பர்களுடன் கூடி விளையாடுவது வழக்கம் பிள்ளயார் கட்டை (சில்லிக் கட்டை) விளையாட்டு, கிட்டிப்புல் விளையாட்டு, கயிறு கட்டி ஓடும் பஸ் விளையாட்டு, மணியாரே மணியாரே மணியென்ன நேரம் விளையாட்டு, கள்ளன் பொலிஸ் விளையாட்டு, தூத்தி விளையாட்டு, தொட்டாசி விளையாட்டு, எட்டுக்கோட்டு விளையாட்டு, ரெட்டிக் கோட்டு விளையாட்டு, ஊஞ்சல்கட்டி ஆடுதல் (வருட ஊஞ்சல்), நாயும் புலியும், நாயும் இறைச்சியும், வார், நொண்டி ஆடுதல் என்று பற்பல கிராமத்து விளையாட்டுக்களிலும் பழக்கமுடையவர்காக சுதனும் மதியும் இருந்தார்கள். 'மாலைமுழுதும் விளையாட்டு என்று பழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா' என்ற பாரதியின் வாக்கை மறக்காதவர்கள் சாயங்காலம் சரியாய் விளையாடுவார்கள். தோழர்களுடன் சின்னச் சின்னச் சண்டைகள் மூழும் மறுநாள் மறைந்து போகும். மீண்டும் விளையாட்டுத் தொடரும் என்ற இயற்கையுடன் ஒன்றியதான விளையாட்டுக்களை விளையாடி இன்புறுவார்கள். விளையாட்டில் வரும் சின்னச்சின்னச் சண்டைகள், சின்னச்சின்ன விட்டுக் கொடுப்புக்கள், இன்று இருக்கும் வன்மம் நாளை தெரியாமலேயே மறைந்து போகும்.
காலையில் மாதவியாள் பழஞ்சோறு கரைத்து தயிரும் கலந்து தேனும் விட்டு கொடுப்பாள் ஐயோ அதை உண்டால் பசியின் பார்வை கிட்டவே நிற்காது. இன்று நினைத்தாலும் நாவூறும் இதைவிட பாற்சோறும் கறிவேப்பிலைச் சுண்டலும், அவித்த முட்டை, ஆட்காட்டி முட்டை, வயல் கோழிமுட்டை என்று இயற்கையோடு ஒட்டிய உணவுகளாய் சங்கமிக்கும் மட்டுமன்றி 'முருங்கையிலை இரும்புச் சத்து, கீரையோ ஜீரணமாக்கி என்றெல்லாம் எல்லா மரக்கறிகளுக்கும் நல்லுதாரணம்' காட்டுவார் கிருஷ்ணன்.
வருடப் பிறப்பு வந்துவிட்டால் பலகாரங்களின் வரிசை பந்திகட்டும் சக்கரைப் பலகாரம், பனங்காய்ப் பலகாரம், வேப்பம்பூப் பச்சடி, முறுக்கு, துவைச்சடித்தான், முந்திரிப்பலகாரம், பேரீச்சம் பலகாரம், நொறுக்குச் சோகி, சீனிப்பாச் சோகி, ஓட்டுக் கொழுக்கட்டை, தொதெல் என்று கூறிக்கொண்டே போகலாம். இப்பலகாரங்களுக்கு இளையான் அப்பு 'இந்தப் பலகாரத்திலப்பு கனேக்க ருசியிருக்கு இனிப்பு, புளிப்பு, உறைப்பு அதெல்லாம் என்னண்டு தெரியுமா நம்மட வாழ்விலவாற இன்பதுன்பந்தான் இதில நமக்கு கசக்கிறமாதிரி வாழ்க்க கசக்கும் இதில இனிக்கிற மாதிரி வாழ்க்க இனிக்கும் எல்லாத்தயும் நாம பொறுத்து நடக்கணும் இதத்தான் இந்த பலகாரம் சொல்லுதுடாமனே'
'மாவ போட்டுவச்சி
பக்குவமாப் பசஞ்சி வச்சி
பாவ காச்சி வச்சி
பதமாக புரட்டிவச்சி
கையில் உருண்டைகட்டி
தட்டித்தட்டி போட்டுவச்சி
உருக்கெண்ணை கொதித்துவர
ஒண்டொண்டாய் போட்டெடுத்து
மண்சட்டி நிறைய நிறைந்துவரும்
பலகாரம் அது இனிப்பு பலகாரம்'
என்று பாடி விளக்கம் கூறுவார். இதைவிட 'தோடம்பழச் சாறு, இளநீர், வெள்ளரிப்பழம் இதெல்லாம்கூட களைப்பப்போக்கிற இயற்கைப் பாணங்கள்தான் ' என்பார்.
ஒருநாள் மருதன் தன் வீட்டிலிருந்து 300 மீற்றர்கள் தூரத்தில் உள்ள ஆற்றங்கரை அருகில் இருக்கும் அரச மரத்தை நோக்கி புறப்பட்டான் அப்போது நேரம் காலை 11.00 மணி வெயில் உச்சி கொட்டினாலும் மரத்தின் கீழ் சென்றதும் வீசும் காற்று குளுகுளுவென்று குளிற்சியாக இருந்தது. அப்போது அங்கிருந்த கந்தப்பு 'என்ன மருதா எப்ப வந்தாயடப்பா' என்று கேட்டார் அதற்கு மருதன் 'நேற்று வந்தனப்பு' என்றான் அதற்கு கந்தப்பு 'என்ன அடிக்கடி பள்ளிக்கி லீவுதான் போல' என்றார். மருதனோ 'அப்படியில்லப்பு இப்ப எக்சாம் லீவு அதுதான் எல்லாப் பொடியன்களும் அவயவ வீட்ட போவாங்க அதுதா நானும் வந்திட்டன்' என்றான். இவ்வாறு கதை தொடருகையில் வீசிவந்த குளிர் காற்று கண்களை தாலாட்ட மருதனும் அந்த மண்ணில் கொண்டுசென்ற துண்டை விரித்து உறக்கத்தில் ஆள்ந்து போனான்.
சில மணித்தியாலங்களின் பின் அங்கு வந்த அவனது தோழர்கள் அவனை தட்டியெழுப்பி விடிந்து விட்டதாகக் கிண்டல் செய்து குதுகலித்தனர் தமது பாலிய நண்பர்கள் தன்னைக் கிண்டல் செய்வது ஒன்றும் பெரிய விடயமல்ல ஒவ்வொருவரையும் மருதன் அவதானித்தபோது ஒருவர் கையில் அவித்த வயல்கோழிமுட்டையும் மற்றையவர் கையில் கட்டுவிழாக் கிழங்கும் இன்னுமொருவர் கையில் பனம் நுங்கும் அடுத்தவர் கையில் இளநீரும் என்று அனைவரிடமும் கிராமத்து உண்டிகளாய் காணப்பட்டது வம்மி இலை கொய்து அதிலே அனைத்தையும் இட்டு கூட்டுணவு உண்டுகழிக்கையிலே வந்த இன்பத்திற்கே அளவில்லை ஒவ்வொரு உணவும் ஒவ்வொரு விதமான சுவையாய் இருந்துடன் தோழர்களுடன் கூடி உண்பதும் ஒருவகை இன்பம்தான் அப்போது தோழரில் ஒருவன் 'டேய் மருது என்னடா இப்படி திங்கிறாய் எல்லாத்தையும் சேத்தெடுத்து ஒருகட்டுக் கட்டு எல்லாம் உனக்குத்தான் நாங்க தினம் திம்பதான் நீhன் இன்னிக்கி எங்கட விருந்தாளி' என்றான் இவ்வாறு தமது தோழர்கள் தம்முடன் வைத்திருக்கும் பாசமும் அன்பும் உண்கின்ற உண்டிகளையும் பார்க்க மேலான ஒரு சுவையாக இருக்கக் காண்டான். தான் சிறு வயதில் அவர்களுடன் கூடி ஒருவர்க்கு ஒரு கையிடி அரிசெடுத்து கூட்டாஞ்சோறு செய்து உண்ட ஞாபகங்கள் மனதைச் சொக்க வைத்தன. இவ்வாறு சிலமணி நேரங்கள் அவர்களுடன் மருதன் இன்புற்றிருந்தான்.
சடுதியாக எதற்கோ திரும்பிப் பார்த்தவன் தன் தாய் மாதவியாள் வருவதைக் கண்டான் தாய் அவனைத் தேடிவந்தாள் 'என்னதம்பி வந்த உன்னக் கனநேரமாக் காணம் அதுதான் ஒரெட்டுப் பாத்தித்து போவமெண்டு வந்தனான்' என்றாள் மருதனோ 'அம்மா நம்மட கூட்டாளிங்க வந்தாங்க அவங்களக் கண்டும் கனநாள் அதுதான் கொஞ்சம் சம்பாசனை செய்திட்டிருந்தம்' பாத்தாத் தெரியிதுதான் அதுசரி தம்பி சோமு அப்பாவுக்கு கால் எப்பிடி இப்ப' என்று சோமுவிடம் கேட்டாள் சோமு 'நம்மட இளையான் ஐயா மருந்து செய்தவர் இன்னும் ஒரு கெமையில நடப்பாராம் என்று சொல்லிருக்கார்' அம்மா என்ன சொல்றநீ' 'இதென்னப்பா சோமுட அப்பா கரத்தை வீழுந்து காலடிபட்டு ஒருமாதமால்லோ கிடக்காரு' 'எனக்குத் தெரியல்லையே' என்று சோமுவைப் பார்க்க சோமுவும் தலையசைக்கின்றான். 'சரிம்மா நீ போ நான் சோமுவீட்ட அவங்க அப்பாவ ஒருக்கா பாத்திட்டு வாறன்' என்றான் அனைவரும் கூடி சோமுவீடு சென்று நலம் விசாரித்து வந்தனர்.
பின்னர் தன் நண்பர்களிடம் இருந்து விடைபெற்று வீடு நோக்கிப் புறப்பட்டான் அப்போது தம்பட்டிக்குளதருகால் சென்றுகொண்டிருக்கும்போது சிலர் கரப்பு, அத்தாங்கு, வலை போன்றவற்றால் மீன் பிடிப்பதைக் கண்டான் பிடிபட்ட மீன்களில் விரால், சுங்கான், பனையான், மீசைப்பனையான், குறட்டை என்று பல மீன்கள் இருந்தன. குளத்தில் கரப்புக் குத்திக் கொண்டிருந்த செல்லப்பு மருதனைக் கண்டு 'மருதா மருதா நில்லு' என்று கூப்பிட்டார். ஓடிவந்து அவனது கையில் கோர்வையாக இருந்த இரண்டுவிரால் மீன்களைக் கொடுத்து 'இதுக்கு காண்ட இலை ஆஞ்சி சொட்டுத் தண்ணியில கொம்மைய குழம்பு வச்சி தரச்சொல்லி ஒரு வெட்டு வெட்டித்து போகலாம் இண்டைக்கு' என்றார் 'இல்லப்பு இல்ல நீங்க விலைக்கு குடுங்க அம்மா திட்டும்' என்றான் செல்லப்புவோ 'அடேய் உண்ட அப்பனோட இண்டக்கி நேத்தா நான் சிநேகிதம் வச்சித்திரிக்கன் காசென்னடா காசு இண்டைக்கி போகும் நாளைக்கி வரும் உறவுதாண்டா முக்கியம் கொண்டுபோ கொண்டுபோ' என்றார். மருதனும் முகம்சுழிக்க முடியாமல் வங்கிக்கொண்டு வீடு சென்று கொண்டிருக்கும் போது மருதனிலும் சற்று இளையவர்களான வாலிபர்கள் மண்வார்த்தால் போலிருக்கும் தூய நீர்ப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார்கள் அவர்கள் மருதனைக் கண்டதும் நீருள் மூழ்குவதும் எழுவதுமாக இருந்தார்கள் பின் அவர்கள் கூடி ஏதோ கதைத்துக்கொண்டு மருதனைக் கிண்டல் பண்ணத் தொடங்கினார்கள்
'மருதன்போறார் மருதன்போறார் டும் டும் டும் டும்
சின்னச்சின்ன நடையெடுத்து டும் டும் டும் டும்
ஆங் வரால் மீனு கொண்டுபோறார் டும் டும் டும் டும்
கூடப்போனால் வயிறுமுட்டும் டும் டும் டும் டும்'
என்று பாடினார்கள் மருதனுக்கு அவர்களது கேலி கிண்டல் பிடிக்கும் புன்னகையோடு அவர்களுக்குக் கையசைத்துக் கொண்டு வரும்போது ஓர்குளம் உதித்த வெண்தாமரைகளாய் விதவிதமான கொக்குகள் வயல்வெளிகளில் உலாவுவதைக் கண்கொளாக் காட்சியாகக் கண்டு மகிழ்வுற்றவனாய் சற்றுநடையைத் தளர்த்தி இயற்கையுடன் ஒன்றிய அந்த அற்புதக் காட்டிசியை றசித்துச் சென்றான். வீட்டில் தனது தாய் ஒருவராய் பல்வேறு வேலைகளைச் செய்திருப்பதை அவானித்தான் குறிப்பாக நெல்லை உரலில் இட்டு குற்றியெடுத்துப் புடைத்து உமி, தவிடு, அரிசி என்று வேறுபடுத்தியிருந்தாள் அந்தத் தவிட்டு மணம் அவனுக்கு இனிதாக இருந்தாலும் நண்பர்கள் கொடுத்த உணவுகளால் வயிறு காலியில்லை என்பதால் நாளை பார்ப்போம் என்று விட்டுவிட்டான்.
அவை மட்டுமல்ல கிராமத்து மக்களுக்கு இருக்கின்ற பொறுப்புக்கள் கூட அவனுக்குத் தெரியும் எடுத்துக்காட்டாக பால்கறத்தல், மாடு மேய்த்தல், ஆடு மேய்த்தல், பயிர் வளர்த்தல், அறுவடை செய்தல், வேளான்மை செய்தல் என்று கூறிக்கொண்டே போகலாம். என்னதான் மருதன் பட்டணத்தில் படித்தாலும் மாடுகளைக் கொண்டு வயலை உழுதுவது அவனுக்குப் பிடித்தமான வேலை இருப்பினும் அவனது தந்தை 'விடப்பு அதெல்லாம் என்னோட வேல நீ படிப்பப்பாரு ஒன்னோட படிப்பு முடிஞ்சதும் எனக்கு ஒத்தாசையாக இருந்தால் போதும்' என்பார் மருதனோ 'இல்லப்பு நான்' என்பதற்குள் அவனின் தந்தை 'போ அப்பு போ போ' என்று விடாது விரட்டி விடுவார்.
கிராமத்து கலைகளின் மலினம் இக்கிராமத்திலும் காணப்பட்டது குறிப்பாக கோவிலடிக் கிட்ணர் என்று சொல்லுகின்ற பெயருடைய கிருஷ்ணபிள்ளை கூத்திற்குப் பெயர்போன ஒருவர் இவர் அருச்சுணன் முதலான பல பாத்திரங்களேற்று நடித்திருக்கின்றார். கிராத்து நடுவணதாய் ஆல மரத்தின் கீழ் விடிய விடிய கூத்துப் பழகி ஆடிவருவார்கள் ஒருநாள் கராம மக்களின் சங்கமிப்புடன் அரங்கேறும். இதுமட்டுமன்றி கந்தசாமி என்பவர் கரகாட்டம் பழக்குவதில் கெட்டிக்காரர் அவரும் பல பிள்ளைகளை வைத்து கரகாட்டம் பழக்கி அரங்கேற்றியிருக்கின்றார். இவைதவிர காவடியாட்டம், செம்பு நடனம், கோலாட்டம், கும்மி என்று அரும் பல கலைகள் விளைந்து கிடந்தன. மருதன் சிறுவயதில் வள்ளி திருமணம் எனும் கரகாட்டத்தில் வேட முருகனுக்கு ஆடிய ஆனுபவங்கள் இன்னும் இருக்கின்றது. இவ்வாறான கலைச் செயற்பாடுகளின் போது மக்கள் கூட்டாக பழகி ஒருவருக் கொருவர் இருக்கின்ற கோபாதாபங்களை விடுத்து மனநிறைவோடு ஒத்தாசி வழங்குவதும் மறக்க முடியாத நினைவுகாய் நெஞ்சங்கில் நிறைந்திருந்தன.
இதையும் விட மருதனுக்கு நல்ல அனுபவம் தனது கிராமத்து மக்கள் கூடி வேலை செய்வதில் மிகவும் கெட்டிக்காரர்கள் குறிப்பாக திருமணம், இறப்பு, பிறப்பு, மாரி சடங்கு, சாமத்தியம், வீடு குடிபுகுதல், நோய்வாய்ப்பட்டால் உதவுதல், விழாவை ஒருமித்துக் கொண்டாடுதல் என்று கூறிக்கொண்டே போகலாம். இக்கிராமத்து இளைஞர்கள் மரண வீடு என்றால் தாம் என்ன வேலையிருந்தாலும் அதனை நிறுத்தி மறுநாள் செய்ய உத்தேசித்து அடுத்த கணமே மரணவீடு நோக்கி விரைந்து குறித்த Nலைகள் யாவற்றையம் கூட்டுப் பொறுப்புடன் மிகவும் இலகுவாகச் செய்து முடிப்பார்கள். இதில் விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கு, கூட்டுப் பொறுப்பு, பொறையின்மை முதலானவற்றை இவற்றில் காணலாம்.
பிறருக்கு உதவுவதில் மருதனும் சளைத்தவனல்ல குறிப்பாக தனது தோழர்களுடன் இணைந்து கிணற்றுமடு வெட்டுதல், துலாக்கால் நடுல், கிடுகு கட்டுதல், களியெடுத்தல், வீடு மொழுகுல், சாணம் இடுதல் என்று கூறிக்கொண்டே போகலாம் ஒருதடவை மருதனின் பாட்டன் கதிரவேலியார் வயலில் விளைவுக்காலமாய் இருந்தபோது தமது புத்தடியான் முன்மாரிக் கண்டத்தில் குருவிக் காவலுக்காகச் சென்றிருந்தார். அத்தருணத்தில் புது நெல்லின் வரவுக்காய் பாட்டி இராசம் வீட்டின் ஒரு அறைக்கு சாணமிட்டு மெழுகிக் கொண்டிருந்தார். அன்றையதினம் வைரமுத்து கிழவன் 'அந்தப்பக்கமா போறன் தண்ணிச்சோறு கதிர வேலிக்கி குடுக்கிறண்டா தாவன்' என்று கேட்டு வந்தார். அவரிடம் மண்பானையிலிருந்து பழம் சோறெடுத்து பச்சை மிளகாயும் தயிரும் கலந்து கரையல் செய்து கொடுத்தாள் பாட்டி அவரும் புறப்பட்டார் அப்போது பாட்டி
குக்குக்கூ குயிலு கூவும்
விடியற்சாம வேiயில
வயல்பக்கம் போறவரே
கொஞ்சம் நில்லுங்க
நான் சொல்லும் சேதியப்போய்
அங்கே சொல்லுங்க
நீங்க அங்கே சொல்லுங்க
நானும் நலந்தானே
நம்மவரும் நலந்தானே
ஊட்டு எண்ணத்திலே
ஏங்கவேணாம் தவிக்கவேணாம்
மாலையான நேரம்
மயங்கிய பொழுது நேரம்
மிச்சம் மிச்சம் கவனமுங்க
nவியிலயே போகவேணாம்
வேளைக்கு வேளயிங்க
குறைவிலாம தின்னணுமுங்க
ஒடம்பு இளைக்குமுண்ணா
வெந்ததண்ணிக் குளியலுங்க
வெந்ததண்ணிக் குளியலுங்க..
என்று பாடிமுடிக்கின்றார். வைரமுத்தாரும் சென்று சொல்வதாக தலையசைத்து வண்டியை ஓட்டிச் செல்கின்றார். இவ்வாறு தனது கிராமத்து சுவடுகளை மீட்டி கவலையுடன் கண்ணயர்ந்தான் மருதன். கிராமமும் அதன் வனப்பும் செழிப்பும் என்றும் மறக்கமுடியாத அனுபவங்கள் தான்.
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்குளம், மட்டக்களப்பு

Comments
Post a Comment