உழைப்பின் பொற்கதை


 பதினாறு தங்கப் பதக்கங்கள்  உழைப்பின் பொற்கதை

#######################


பதினாறு தங்கங்கள் பெற்றவளே

பாரினிலே புகழ்பெற்றவளே!

படிப்பினிலே உயர்ந்தவளே 

பண்பினிலே சிறந்தவளே!


பட்டமளிப்பு மேடையிலே

பார்வையெல்லாம் உன்மீதம்மா

பதக்கங்கள் மட்டும் காணோம் 

பின்னணியில் உழைப்பைக் கண்டோம்!


தூக்கமற்ற பல இரவுகள்

தொடர்ந்தோடிய பல கனவுகள்

தோல்வியென்ற தடைக்கற்களைத்

தாண்டிச் சென்ற தடம்பதிப்புகள்!


ஒருநாளில் வந்ததல்ல

உன்னுடைய இச்சாதனை

ஒவ்வொரு நாள் உழைப்பாலே

உருவானது இப்பெருமை!


கற்றலையே உயிராய்க் கொண்டு

கனவினையே துணையாய்க் கொண்டு

முயற்சியையே மூச்சாய்க் கொண்டு

முன்னேறினாய் விடாமுயன்று!


மருத்துவத்தின் மாமாணவி

மதிப்பிற்குரிய சாதனையாளர்

வைத்தியத்தின் சிறப்புமிக்க

மாணவியாய் உயர்ந்தவளே!


ஐந்து துறையில் முதல் பிள்ளை

அறிவினிலெல்லை உனக்கில்லை

முதன்மை சிறப்பினையும்

வாழ்வினிலே சேர்த்தவளே!


நாட்டளவில் முதலிடத்தை

நாடி நின்றாய் திறமையாலே

தங்கப் பதக்கம் பதினாறையும்

தன்வசமாய் பெற்றிருந்தாய்!


முப்பத்திரண்டு தங்கங்களில்

பாதியினை நீ பெற்றாயே

பதினாறு தங்கப் பதக்கங்கள்

படைத்தெடுத்தாய் வரலாறே!


ஆனால் தங்கப் பதக்கமல்ல

உன் வெற்றியின் உண்மை விலை

அதற்குப் பின்னே இருந்ததெல்லாம்

அர்ப்பணிப்பின் அழியாச் சுவை!


பதினாறு மடங்கு உழைப்பு

பதினாறு மடங்கு பொறுமை

பதினாறு மடங்கு ஒழுக்கம்

பதினாறு மடங்கு முயற்சி!


“என்னால் முடியாது” என்ற

எண்ணங்களை அகற்றிவிட்டு

“முயன்றால் முடியும்” என்ற

முன்னெண்ணத்தை வளர்த்தவளே!


வசதிகள் வெற்றிக்கென்றும்

வாசலாகி நிற்காதம்மா

விடாமுயற்சி கொண்டவர்க்கே

வெற்றிவாசல் திறக்குமம்மா!


கையில் உள்ள வசதியல்ல

கனவின் உயரம் முக்கியம்

சூழ்நிலைகள் தடையென்றாலும்

சோராத மனமே முக்கியம்!


மருத்துவம் கற்றதோடு

மனிதநலம் மறக்கவில்லை

ஆய்வுலகப் பாதையிலும்

அறிவொளியைப் பரப்பினாய்!


கர்ப்பிணியின் மனநலத்தை

கவனிக்கும் ஆய்வொன்றும்

கடும் காய்ச்சல் நோயறியும்

சிறப்பான ஆய்வொன்றும்!


டெங்கு நோய்த் தொடர்பாகவும்

தொடர்கின்றாய் ஆய்வுகளை

Interstitial Lung Disease-இன்

இயல்பறிய முயல்கின்றாய்!


படிப்பென்பது மதிப்பெண்ணுக்காய்

பயன்படும் கருவியல்ல

படித்தறிந்த அறிவினாலே

பிறர்வாழ்வை மாற்றுதலே!


ஒரு மாணவன் மதிப்பெண்ணால்

உயர்ந்திடலாம் உலகினிலே

சிறந்த மாணவன் அறிவினாலே

சமுதாயம் உயர்த்திடுவான்!


அன்பான மாணவர்களே 

அறிவுரையை கேளுங்கள்

இன்றிருக்கும் சிறு முயற்சி

நாளைபெரு வெற்றியாம்!


தோல்வியென்றால் துவளாதீர்

தாழ்வென்றால் தயங்காதீர்

குறைந்த மதிப்பெண் வந்தாலும்

கனவுகளை கைவிடாதீர்!


இன்றைய ஒரு மணிநேரம்

இனையத்தில் வீணானால்

நாளையொரு வாய்ப்பை நீங்கள்

நழுவவிட்டுச் செல்லலாம்!


சமூகத்தின் ஒப்பீட்டையும்

சலனங்களையும் விட்டுவிட்டு

உங்கள் இலக்கு நோக்கியே

உறுதியோடு நடந்திடுங்கள்!


நேரமென்பது எல்லோருக்கும்

நிறைவாகவே கிடைக்கின்றது

வெற்றியாளர் நேரத்தை மட்டும்

வேறுவிதமாய் பயன்படுத்துகின்றார்!


பெற்றோர்களே! பிள்ளைகளிடம்

பெருமை கொண்டு பேசுங்கள்

“அவனைப் போல ஏன் இல்லை?

என்று சொல்லி நோகாதீர்கள்!


“நேற்றைவிட இன்று நீ

நன்றாகவே இருக்கின்றாயா?

என்ற கேள்வி கேட்டாலே

எதிர்காலம் மலருமம்மா!


மதிப்பெண்ணை மட்டும் நோக்காதீர்

முயற்சியையும் பாராட்டுங்கள்

குழந்தையின் கனவைக் கேட்டு

கைகொடுத்து வளர்த்திடுங்கள்!


“என்னால் முடியும்” என்ற

எண்ணமொன்றை விதைத்துவிட்டால்

எத்தனையோ உயரங்களையும்

எட்டிவிடும் இளையமனம்!


பதக்கம் பெற வேண்டும் என்று

பயணிப்பது சிறிய கனவு

பிறர்வாழ்வில் பயன்தரவே

படிப்பதுதான் பெரிய கனவு!


மருத்துவராய் நோய் தீர்ப்பாய்

ஆய்வாளாய் வழி காட்டாய்

அறிவாலே மனிதகுலம்

அழகாக மலரச் செய்வாய்!


உன் பதினாறு தங்கங்கள்

ஒளிரட்டும் மேடையிலே

உன் உழைப்பின் ஒளியோ இன்னும்

ஒளிரட்டும் தலைமுறையில்!


“அவரால் முடிந்ததென்றால்

என்னாலும் முடியும்” என்று

ஆயிரமாயிரம் மாணவர்

அகத்தினிலே எண்ணட்டுமே!


கிராமமெங்கும் கனவுகள்

நகரமெங்கும் சாதனைகள்

பாடசாலை தோறும் இன்று

புதிய ஹசினி பிறக்கட்டும்!


கனவு காண் மாணவனே

கனவுக்காக உழைத்திடுவாய்

வீழ்ந்தாலும் எழுந்திடுவாய்

வெற்றிவரை நடந்திடுவாய்!


பதினாறு தங்கப் பதக்கங்கள்

பெருமைக்கொரு சின்னமம்மா

பதினாறு தலைமுறைகளுக்கும்

பாதைகாட்டும் விளக்கமம்மா!


“பதக்கம் உன் கையில் மட்டும்

பெருமையாய் நிலைக்க வேண்டாம்

உன் அறிவு பிறர் வாழ்வில்

ஒளியாக நிலைக்க வேண்டும்!


அன்பான சகோதரியே

உன் சாதனை வாழ்கவே!

இளையோரின் கனவுகளுக்கு

இமயமென வழிகாட்டுகவே!


உழைப்புக்கு உயர்வுண்டென்று

உலகத்திற்கு உணர்த்தினாய்

கல்வியென்ற கருவியாலே

காலத்தை நீ வென்றுவிட்டாய்!


கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

கிரான்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீமிதிப்பு – ஆன்மீக மகிமை