சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை
சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை
பொதுவாக நோக்குகின்ற போது கல்வியியலாளர்கள் என்ற வகையில் பிள்ளை வளர்ச்சி, பிள்ளையின் மனோ நிலை, பிள்ளையை கையாளுதல் முதலான விடயங்கள் பற்றி பலர் ஒருமித்த கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும் குறிப்பிடத்தக்க சில கல்வியியலாளர்களே சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பாக தமது கருத்தினைத் தெரிவித்திருக்கின்றனர்.
ரூசோ சிறுவர்களுக்கான தண்டனை பற்றிய தனது கருத்தில் 'பிள்ளைகளை ஒரு போதும் தண்டிக்கக் கூடாது ஆனால் தம் தவறுகளின் இயற்கையான விளைவுகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கின்றார்.
ரூசோவின் கருத்துப்படி பிள்ளைக்கான கல்வி பிள்ளையை மையப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். என்பது அவர் கூறிய 'தவறுகளின் இயற்கையான விளைவுகளை பிள்ளைகள் கற்றுக் கொள்ளல் வேண்டும்' என்பதிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது தவறுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம் தவறிளைப்பதிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்ய இருக்கின்ற செயற்பாடுகளை நேர்த்தியாகச் செய்வதற்குமான வாய்ப்பை ஏற்படுத்தும் எனக் கொள்ளலாம். பிள்ளைகளை எச்சந்தர்ப்பத்திலும் தண்டிக்கக்கூடாது என்று குறிப்பிட்டதிலிருந்து பிள்ளைகளது கற்றல் செயன்முறை தண்டனையின்றி இடம்பெறுதல் அவர்களுக்கு கல்வி மீது நல்லவிப்பிராயம் ஏற்படுவதற்கு வழியை கொடுக்கும் என்பதையும் உத்தேசிப்பதாக அமைகின்றது.
பெஸ்டலோசி சிறுவர்களுக்கான தண்டனை பற்றிக் குறிப்pடுகையில் 'பிள்ளை அதன் தண்டனைக்கான காரணத்தை விளங்கிக்கொள்ளும் பட்சத்தில் மட்டும் அது வழங்கப்படலாம் என்ற நிபந்தனையுடைய தண்டனையை' ஏற்றுக் கொண்டார்.
இவருடைய கருத்தினை நோக்கினால் பிள்ளை ஒரு தவறினை இளைக்கின்றபோது அத்தவறினை மீளவும் செய்யாமல் அவர்களை வலியுறுத்துகின்ற வகையில் பிள்ளைகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் அவர்களது நேரான மனவெழுச்சிகளை உந்தக்கூடிய வகையில் தண்டனைகள் வழங்கப்படல் வேண்டும். என்பதை வலியுறுத்துவதாக அமைகின்றது. இருப்பினும் வழங்கப்படுகின்ற தண்டனை பிள்ளை தன்மீது நல்லவிப்பிரயங்களைக் கொள்ளக்கூடியதாகவும் நேரான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கும் வழிவகுப்பதுமாக அமைதல் வேண்டும்.
ஸ்கின்னர் தண்டனை பற்றிக் குறிப்பிடுகையில் 'குறித்த ஒரு துலங்கல் ஏற்படும் போது உயிரி விரும்பாத அல்லது தவிர்க்க விளையும் தூண்டிகளை அல்லது நிகழ்வுகளை உயிரிக்கு வழங்குதல் தண்டனை எனக் கூறலாம்' உயிரிக்கு விருப்பமான மீள வலியுறுத்திகளை நீக்குதலும் தண்டனையாகும். தண்டனையானது ஓர் உயிரியின் நடத்தையை ஒடுக்கும் தன்மையைக் கொண்டுள்ளமையினால் இது எதிர் மீளவலியுறுத்தியாகக் கருதப்படுவதில்லை. மேலும் தண்டனையானது கற்றல் நிகழ்வதற்கு எதிராகச் செயற்படும் தன்மை கொண்டதாகவும் காணப்படுகின்றது. கற்பித்தற் பணி பற்றிய தெளிவான விளக்கத்தினைப் பெறுவதற்கு தண்டனை பற்றிய இக்கருத்துக்களும் பெருமளவு உதவுகின்றன. இதிலிருந்து நோக்குகின்ற போது பிள்ளையின் கற்றல் நேர்த்தியாக இடம்பெறுதலிலிருந்து அவர்களை வேற்றுவழிக்கு இழுத்துச் செல்லக்கூடிய தன்மை தண்டனைக்கு இருக்கின்றது என்பதனை அறியக்கூடியதாகவுள்ளது.
கிளாக் எல் ஹல்லின் கருத்தாக உயிரியின் துலங்கல் உடனடியாக மீள வலியுறுத்தப்படும் போதுதான் அத்துலங்கலினால் முழுமையான கற்றல் ஏற்படும் எனும் கருத்தானது பாடசாலையில் பிள்ளைகளின் செயல்களுக்குக் காலதாமதமின்றி மீளவலியுறுத்தல் நடவடிக்கைகளை ஆசிரியர் மேற்கொள்ள வேண்டுமென்பதை வலியுறுத்துகின்றது. குறிப்பாக ஆரம்ப வகுப்புகளில் பிள்ளைகளின் தேவைகள் உடனடியாக நிறைவேற்றப்படும் வகையில் மதிப்பெண்கள், பரிசுகள், பாராட்டுக்கள், கணிப்பு போன்ற வெகுமதிகளை வழங்க வேண்டும். தாமதமாக வழங்கப்படும் மீளவலியுறுத்தல்களினால் பயன் ஏதும் ஏற்படுமென உறுதியாகக் கூறமுடியாது.
இவ்வாறே 'தண்டனை வழங்கப்பட வேண்டிய சந்தர்ப்பங்களில் அத் தண்டனைக்குரிய செயல் காணப்பட்ட வேளையிலேயே அதாவது உடனடியாகவே தண்டனை வழங்குதல்' பயனுடையதாகும். என்ற கருத்தை உற்று நோக்கினால் கால தாமதமாகி வழங்கப்படுகின்ற தண்டனை பிள்ளையினால் ஏற்றுக் கொள்ள முடியாததாகவும் அதனால் சமனிலைப் படுத்தமுடியாத மனவெழுச்சிகளும் உருவாவதற்கான வாய்ப்புக்களும் இருக்கின்றது. எனவே இதனை கவனமான முறையில் ஆசிரியர் கையாள்வது அதாவது உடனுக்குடன் இவை இடம்பெற்றால் பிள்ளை ஏற்பதற்கான சாத்தியங்களும் ஏற்படலாம் எனக் கொள்ள முடிகின்றது.
தண்டனை தொடர்பாக இவர்கள் முன்வைத்த கருத்துக்கள் பிள்ளையின் செயற்பாடுகளில் மாற்றம் ஏற்படாதவாறு வழங்கப்படல் வேண்டும். என்பதனை இனங்காண வழிவகுப்பனவாய் அமைகின்றன. இருப்பினும் தண்டனை வழங்காத வகையில் பிள்ளைகளை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்வதற்கான செயற்பாடுகளை முதன்மைப்படுத்தி அவர்களது மறை நிலையான செயற்பாடுகளைத் திசை திருப்பக்கூடிய நேர்த்தியான செயன்முறைகளை முன்னெடுப்பது சாலவும் சிறந்ததாக இனங்காணப்படுகின்றது.
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
கிரான்கும், மட்டக்களப்பு
நல்ல பயனுடைய கட்டுரை . தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநல்ல பயனுடைய கட்டுரை . தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteநல்ல பயனுடைய கட்டுரை . தொடர்ந்து எழுதுங்கள்
ReplyDeleteசிறப்பு மிகவும் பயன்தரும் ஆக்கமிது. உங்கள் முயற்ச்சிக்கும் ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றிகள். உங்கள் சேவை தொடர அல்லாஹ் துணை புரிவானாக,
ReplyDelete