சங்கம் மருவிய காலம்
சங்கம் மருவிய காலம்
கி்.பி. 300 - 600 காலப்பகுதி சங்கம் மருவிய காலம் எனப்படுகிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ் நாடு அயலார் ஆட்சிக்குட்பட்டது. சோழ நாட்டையும் பாண்டி நாட்டையும் களப்பிரர் கைப்பற்றி ஆட்சி செய்தனர். நடு நாடும் தொண்டை நாடும் பல்லவர் ஆட்சிக்குட்பட்டன. களப்பிரர் பாளி மொழியையும், பல்லவர் பிராகிருத மொழியையும் ஆதரித்தனர். இவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மொழி, தமிழ்க் கலைகள், தமிழ்ப் பண்பாடு என்பன வளர்ச்சி குன்றின. தமிழ் மொழியில் பெருமளவிலும் சிறப்பான முறையிலும் நூல்கள் தோன்றவில்லை. எனவே, தமிழ் இலக்கிய வரலாற்றிலே இக்காலப் பகுதியினை சங்கம் மருவிய காலம் அல்லது 'இருண்ட காலம்' எனக் குறிப்பிடுவர்.
இருண்ட இக்காலப் பகுதியிலும் சில தமிழ் நூல்கள் தோன்றின. பதினெண்கீழக்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியன இக்காலகட்டத்தில் எழுந்தனவெனக் கூறுவர். இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சங்க கால நூல்கள் என்று சிலர் குறிப்பிடுவர். இந்நூல்கள் பொருளாலும் நடையாலும் சங்க இலக்கியங்களினின்றும் வேறுபட்டுள்ளன. "அந்நூல்கள் எல்லாம் எவ்வாண்டில் எழுதப்பெற்றன என்பதை அறிந்து கோடற்கு ஆதாரங்கள் கிட்டவில்லை" என்று சதாசிவ பண்டாரத்தார் கூறுவர்.
இந்த இருண்ட காலப் பகுதியிலேயே காரைக்காலம்மையாரும் திருமூலரும் வாழ்ந்தனர். காரைகாலம்மையார் அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் இரண்டு என்பவற்றை இயற்றினார். இபத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் நமக்கு கிடைத்துள்ள சங்கநூல்கள். ஆகும். அவற்றில் தற்போது கிடைத்துள்ள சங்கப்பாடல்கள் 2381. அவற்றுள் 2279 பாடல்களுக்கு மட்டுமே அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவருகின்றன. ஏனைய பாடல்களைப் பாடிய புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை.
சங்க காலப் புலவர்கள் 473 பேர். சங்கம் மருவிய காலப் புலவர்கள் 18 பேர். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைப் பாடிய புலவர்களைச் சங்கம் மருவிய காலப் புலவர்கள் என்று குறிப்பிடுகிறோம். கபிலர் என்னும் புலவர் சங்க காலப் புலவர் பட்டியலிலும், சங்கம் மருவிய காலப் புலவர் பட்டியலிலும் உள்ளார். இவர்கள் வெவ்வேறு புலவர்கள் என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்வதற்காகவே இந்தப் பட்டியல் இங்குத் தரப்படுகிறது. மேதாவியார் என்னும் புலவரையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும்.
புலவர் பெயர்கள் அகரவரிசைப் படுத்தப்பட்டு அவரால் இயற்றப்பட்ட நூலின் பெயருடன் இங்குத் தரப்பட்டுள்ளன
கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை
Comments
Post a Comment