அப்பா என்பது அதிசயமான புத்தகம்

 அப்பா என்பது அதிசயமான புத்தகம்

############################## 

அப்பா என்பது 

அதிசயமான புத்தகம் 

ஆசைகள் தீர்த்திடும் 

அருமையின் பெட்டகம் 

இன்பமே இலக்களிக்கும் 

இனிமையின் சட்டகம் 

ஈதலின் நாயகன் 

இணையில்லா தலைமகன் 

எங்கள் குடும்பத்தின் 

தலை மகன் 

உண்மையின் உயிராகி 

உலவிடும் நாயகர் 

உதிரமோ தந்தெமை 

உலகிலே விட்டவர் 

ஊரிலே அவர் பெயர் 

பிள்ளையால் நிலைக்கனும் 

என்றே என்றென்றும் 

உரைத்திடும் போதகர் 

எங்களின் எண்ணமோ 

எல்லாமாய் நலம் பெற 

ஏணியாய் உயர்ந்துமே 

என்றென்றும் நிற்கின்ற 

எண்ணமாய் உயர்ந்தவர் 

இவர்

எல்லையில்லா காவலர் 


ஏக்கங்கள் தீர்த்திடும் 

எங்களின் பேறவர் 

உயர்வினில் மகிழ்ந்துமே 

பேரெழில் கொள்பவர் 

எத்தனை எத்தனை 

ஜென்மங்கள் எடுப்பினும் 

எங்களால் என்னதான் 

செய்யணும் தியாகமான தீபமே 


ஐயையோ என்று நாம் 

அலறிய போதிலும் 

அன்பாய் அவர் வந்தே 

அரவணைத்து நிற்பவர் 

எங்கள் தந்தையாம் திருமகன் 

இவர் குணத்திலே உயர்ந்தவர் 


அப்பா என்கின்ற 

மூன்றெழுத்து மந்திரம் 

முந்தி நின்று 

முழுமையும் செய்யும் 

முடிவில்லாத அற்புதம் 

அன்பு கொண்டமை 

அரவணைத்துக் காத்திடும் 

சின்னம் சொற்பணம்

இது பெரும் சொற்பணம் 


பண்பில் நிறைந்துமே 

பரிவுகள் தந்துமே 

பாசமாய் மேவிய சித்திரம் 

ஏடுகள் தூக்கிய 

எங்களின் கையதோ 

என்றுமே ஓடுகள் தூக்கியே 

ஒரு கதை பேசிடா 

வாசகம் பண்ணியே 

வழியதை செய்தவர் 


படித்திட நினைக்கையில் 

பாரதில் சரித்திரம் 

பிஞ்சு விரல் பிடித்து 

பிடிப்பாக எனையெடுத்து 

பள்ளியிலே சேர்த்துவிட்டு 

படிப்பதற்கு வழி கொடுத்த பாத்திரம் 


தோழிலே சுமந்தெனை 

தோரண ஊர்வலமாய் 

தொடர்ந்து நடை செய்து வந்த தொகையிலா இறைவனென் அப்பா என்கின்ற விழுதெழில் ஆலமரம் 


வெயில் குளித்து வேலை செய்து 

வேகாத வெக்கையிலே வதங்கி நின்று தன் பிள்ளை தான் வளர 

வேலையிட்ட தந்தையாய் வந்துதித்த தரணியின் நாயகன் 

தந்தை என்கின்ற 

நாமம் சூடிய தலைமகன் 


தந்தை போன்ற தெய்வம் 

ஒன்று உண்டோ 

இத்தரணியிலே சொல்லுங்கள் 

அவரது விந்தைகள் ஆயிரம் 

கண்டே கலைத்திட்ட செல்வங்கள் 

முந்தை வினைகள் களைந்தவர் 

முற்றும் துறந்த முனிவர் 


கற்க கசடற 

கற்றபின் நிற்க அதற்குத் தகவென்று

கல்வியின் மகத்துவம் 

கருத்தினில் அமர்த்தியே 

நாங்கள் கற்றிட நித்தமும் உழைத்தவர் 


நல்ல அறம் நல்லறம் இதுவென 

என்றும் எங்கள் நெஞ்சிலே 

உறைத்திட இறை சிந்தையை

நெஞ்சினில் ஊட்டியே 

இன்பமாய் ஒரு கதை 

என்றென்றும் எங்கள் காதினில் உரைத்தவர் 


பெரியோரை பணிந்திட்டால் 

பெருமையும் படியேறும் 

பெருங்குறை அதை தீர்த்திட்டால் பெரும்காலம் கதையாகும் 

பெற்ற பிள்ளைகள் என்றென்றும் பெருமிதம் சேர்த்திட 

பேரழில் பொங்கியே பெருமிதம் கொள்பவர் 


அவர் கட்டியணைத்து என் உச்சியே குத்திய மீசையால் முறுகினான் அழுதிட மறுகணம்

சவரக் கத்தியோ அவர் கன்னத்தை கீறியே மீசையின் கதையதை முடித்திட்ட முந்தையர் அவர் எங்கள் தந்தையர் 


கண்ணாகி நின்றெமை கருத்தாகக் காத்த தெய்வமாகிய காலமெல்லாம் நம் எண்ணமாய் வசிப்பவர் 

தந்தையெனும் தெய்வம் தரணியில் வந்ததோர் தலைமுகத்தாரகம் 

அவர் நீண்டதோர் காவியம் 

பெரும் கடலதன் ஓவியம் 


அப்பன் என்பது அப்பப்பா ஆயிரம் தெய்வங்களுக்கு சமானம் 

தன் பிள்ளை வயிறார 

தளராது உழைக்கின்ற தெய்வம் 


கல்விக்கு கரம் கொடுத்து 

கடைசி வரை காத்திருந்து 

தன் பிள்ளை உச்சரிப்பில் 

சடுதியாய் மலர்க்கின்ற வண்ணம் 


ஆரம்பக் கல்வி தந்து 

அதற்கு மேலும் அருளை தந்து

மூன்றாம் நிலை கல்வி பெற 

நிலைமிகுந்த உபாயம் செய்து 

வளர்ந்தோர் கல்வியுளே 

வட்டமிடச் செய்து நிதம் 

அகமகிழ்ந்து களித்திட்ட அறிவினுரு வண்ணம் 


தான் பட்ட கஷ்ட நஷ்டம் 

தன் பிள்ளை பட்டிடாமல் 

கல்வியின் பாதையுளே செலுத்தி 

என்றும் களிப்புறும் திண்ணம் 

எங்கள் தந்தை சிறப்புறு வண்ணம் 


வெயிலோடு வெயிலாகி 

வெம்மையும் அவராகி 

இடியோடு மின்னலும் 

பனியுமாய் அவராகி 

இந்நிலம் நாம் வாழ 

தன் இன்பங்கள் களைந்தெமை இடரிலாப் பதமாகி 

இறையோனாய் எங்கள் முன் 

எப்போதும் எழிலாகும் 

நீண்ட தூர காவலர் எங்கள் சேவகர் 


தந்தைக்கு நிகராக எவருமில்லை அவருடைய நெஞ்சிலே வஞ்சமில்லை கூட இருக்கையில் பஞ்சமில்லை 

தந்தை சொல்லுக்கு மிச்சமில்லை தந்திரம் செய்வதில் சக்தியில்லை 

அச்சம் என்பது தெரியவில்லை 

அவரது குரலில் ஏற்றமில்லை 

நேர் நின்று கதைத்துப் பார்த்ததில்லை அவரே இருக்கையில் வேறு இல்லை அற்புதம் என்பது வார்த்தையாகி அறனெனும் தோழராய் எம்மோடு எம்மையே நடத்துவார் 


தந்தையை போற்றுவோம் 

தரணியில் உயர்த்துவோம் 

நம் செயல் கண்டுமே 

நாளெல்லாம் மகிழட்டும்

__________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் 

கிரான்குளம் 

மட்டக்களப்பு

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025